சனி, 25 ஜூன், 2016

மாமழை..


நீல வண்ணத்தில் துயர ரேகைகளாக தூவுகிறது காலத்தின் மழை விழி நீளும் புதிர்களின் தடங்களில் அந்த மாமழை... நுழைவாயிலற்ற சுவர்களாக குழம்பிய சித்திரங்களாக திகட்டும் சுவையொன்றாக அந்த கானல் மழை ஒரு சனிக்கிழமை புலர்ந்த வானம் சிவப்பாக மாறியிருந்தது அதன் கூரையிலிருந்து சில துளிகள் விழுந்து கொண்டிருந்தன நிலத்தில் போர்த்தியபடி கிடந்தது பழுப்புநிறம் நிலம் இருப்பதற்கான ஒற்றைசாட்சியாக வனம் பழுப்பை பூசியபடி வானத்தை நோக்கி தாவிக் கொண்டிருந்தது உயிர்களின் வாசனையற்ற அந்த உயரத்தில் ஒற்றை தடாகம் ஒற்றை தாமரை படிக்கரையில் அந்த சிறுவன் ஒளிரும் கண்கள் ஒற்றை சிரிப்பு நிலம் பிளந்து ஆசையும் ஆங்காரமும் ததும்ப உயரம் நோக்கி கிழிந்த சுவர்களின் கிளைகளை பிடித்தபடி மேலேறிக் கொண்டிருந்தார்கள் மனிதர்கள்.... கீழே அமர்ந்தபடி மேலே பார்த்தான் புத்தன் மேலிருந்தபடி கீழே பார்த்தான் சிறுவன் செஞ்சிவப்பாக மழை வலுத்தது..

லாரி டிரைவர் ராஜாக்கண்ணு


லாரி டிரைவர் ராஜாக்கண்ணு -சிறுகதை-வ.கீரா திருச்சி சந்தை மசங்கி கிடந்தது.சூரியன் பூக்காத அந்த பொழுதில் நிலா தன்னை மறைக்க செஞ்சிவப்பு வானை இழுத்துப் போர்த்த முயன்று கொண்டிருந்ததை ஈபி காலனி அரசமரத்தில் துயிழெலுந்த காக்கைகளின் கெக்கெலிப்பில் ஊர் அறிந்து கொண்டிருந்தது.


வியர்வை சட்டையை மாட்டியபடி உழைப்பாளிகள் வண்டிகளில் இருந்து பாரங்களை இறக்கிக் கொண்டிருந்தார்கள்.மாரியாயி கிழவி அந்த அதிகாலையிலும் பனியை மீறியபடி வெப்பலாக வியபாரம் பேசிக்கொண்டிருந்தார். லாரிகள் உறுமியபடி இருந்தன.அவற்றின் உறுமல் அந்த பகுதிக்கு மிக பழைய உறுமலாக இருந்திருக்க வேண்டும்.எந்த அசட்டையுமற்று மக்கள் சத்தங்களின் ஆலாபனையை கடந்து சென்றபடி இருந்தனர்.சந்துரு வந்து வெகு நேரம் ஆகி இருக்க வேண்டும்.கண்ணை மீண்டும் கசக்கி பார்த்தான் மூர்த்தி.இருட்டில் லாரியின் பின் டயருக்கு அருகில் தெருவோர திண்டில் அமர்ந்திருந்தார்.வழக்கமாக என் எல் எஸ் லோடு புக்கிங் அலுவலகத்தில் ஓட்டுனர்களின் உறக்கம்.சந்துருவும் அங்குதான் தூங்குவார்.மூர்த்திதான் எழுப்புவான்.இன்றென்ன அவரே எழுந்துவிட்டார் என்கிற குழப்பம் அவனை வளைத்தது.கிளினர் பலகையிலிருந்து எம்பிக் குதித்து லுங்கியை இடக்கு மடக்காக வாரிக்கட்டியபடி அவரிடம் போனான். அந்த இருட்டை பிளந்திருந்தது சந்துருவின் முகத்தில் அப்பியிருந்த கருமை. இருவரும் டீ சாப்பிட போனார்கள்.பாலிலிருந்து நீர் புகையாக பரவி அச்சிறு கடையை நிரப்பியிருக்க,இருவருக்கும் தேனீர் வந்தது.அத்தனை சூட்டையும் ஒரே தடவையாக உறிஞ்சி முடித்திருந்தான் சந்துரு.மூர்த்தியால் இதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.சந்துருவின் கருமை தேனீராகி மூர்த்தியின் நாக்கை ஊடுருவி தொண்டையின் சிக்கிமுக்கி கல்லை கருப்பாக மாற்றி சிறுகுடல் பெருங்குடலென பரவி அடுக்கி வைக்கப்பட்ட கருநாகம் போல குடல் வெளிச்சமற்று கருகியது. சந்துரு இன்றைய லோடுக்கு வரப்போவதில்லை என்பதை மூர்த்தியால் உணர முடிந்தது.நேற்று மாலை மருத்துவமனைக்கு ரிசல்ட் வாங்க போகும்பொழுது தன்னை கழட்டி விட்டு போனதை வைத்தே ஓரளவு உணர்ந்திருந்தான்.சந்துருவின் நெடிய ஆறடி இரண்டங்குல உயரமும் நூறாண்டு பலாக் கிளையை வெட்டி பிளந்த பரந்த செம்மார்பும் கூட கூனி நின்றதில் அவன் உணர்ந்து கொண்டான். பொதுவாக நடையில் வழியில் இறங்காதவன்தான் சந்துரு.ஹான்ஸ் புகையிலையை உள்ளங்கையில் பெருவிரலால் அதக்கி உதட்டை இழுத்து பல்லுக்கு இடையில் வைத்தபடி லாரியை எடுத்தால் சாறின் கிறக்கத்தில் அடிச்சுப்போட்டாப்ல தொழுதூர் பிரிவுலதான் நிறுத்துவான்.காதலிச்ச பொண்ண விட்டுட்டு வேற பொண்ண கட்டிக்கிட்டதிலிருந்து வாய்ப்புக் கிடைக்கும் பொழுது சமயபுரத்துலயோ,பாடாலூர் காட்டுக்கிட்டயோ கைப்போடுற இராபெண்கள்கிட்ட மாட்டிக்கிட்டான்.வண்டிச் சூட இறக்கிவைக்க போன ஆளு,நோய பத்திக்கிட்டு வந்துட்டான். ”..யாரு ஆளு மாத்துறது..” ”ராஜாக் கண்ணு வரான்” சந்துருவை அதன் பிறகு ஈபி காலனி பக்கம் பார்க்கவே இல்லை மூர்த்தி. ராஜாக்கண்ணு என்றதும் லாரி டிரைவர் ராஜாக்கண்ணு சிவாஜி கணக்கா கொழுக் மொழுக்கென மூர்த்தி எதிர்பார்த்து ஏமாந்து போனான். தோலுரித்து குடல் இறக்கிய ஆடு பாய்கடையில் தலைகீழாக தொங்கியது போல ஏப்பசாப்பையாக வந்து வாய்த்தான் டிரைவர் ராஜக்கண்ணு.எழும்பை கழிச்சா அரை கிலோ சதைதான் தேறும்.குருவிக்குடுவையை தலையில கவிழ்த்து மூக்குக்கு கீழ இரண்டு பக்கமும் கம்பளிப் புழுவை பொறுத்தியிருந்தான் ராஜாக்கண்ணு.அவ்வப்பொழுது புழுவை நீவிவிட்டு சிலிர்க்க வைப்பான்.மூர்த்தியும் அவனோடு செட்டானான்.வேறு வழி. வண்டியை பறக்க விடுதலில் பிணந்தின்னி கழுகு ராஜாக்கண்ணு.கல்லணையில மேரியோட ஆளுங்கள அள்ளிப் போட்டுக்கிட்டு சிட்டாப் பறந்து புதுக்கோட்டைய தொட்டு நின்னான் ராஜாக்கண்ணு. மேரி அழுத்தமானவ.எவன் கண்ணு மார்ல சிக்குனாலும் கண்ண பிச்சு காக்காய்க்கு போட்டுறுவா.ஒத்தை ஆளா சேத்து குழி கால்வாயில இருந்து என்பது கிலோ வாழைகுலையை குழந்தைய தூக்கியாற மாதிரி காய்க்கு காயம்படாம வண்டியில சேர்ப்பா.மேரி மாதிரிதான் மேரிகிட்ட இருக்குற ஆளுங்களும்,வாழைக்காய் லோடுக்கு போற எந்த டிரைவரும் பயப்படச் செய்வான்.எப்ப எந்த ஈரத்துல பதிஞ்சு வண்டி நிக்கும்னு தெரியாது.அதுவும் லோடு ஏத்தி வண்டி அழுந்தினா அவ்ளோதான்.கட்டைய சொறுகி,கல்ல சொறுகி,வாட்டம் புடிச்சி வண்டிய மேடு ஏத்துறதுக்குள்ள கால்பகல் அரைப்பகல தின்னுடும். ஆனா மேரி ஆளுங்க வாழைக்காய் ஏத்த வந்தா டிரைவருக்கும் கொண்டாட்டம்,கிளினருக்கும் கொண்டாட்டம்.நல்ல இடத்துல வண்டிய விட்டுடலாம்.எவ்ளோ தூரம்னாலும் அசால்ட் பண்ணிடுவாங்க.அதே மாதிரி.அட்டி அடுக்குறதும் அவங்கதான்.ஒரு வாழைக்காய் கூட இறக்குற வைரைக்கும் நசுங்காது.தேய்ஞ்சி கருப்படிக்காது.மத்த ஆளுங்க வந்தா கிளினர் நாக்குத் தள்ளிப் போவனும்.அட்டி அடுக்குறதுக்கும்,கிளினர் வேணும் ,தார்ப்பாய் போடுறதுக்கும் கிளினர்தான் செய்யணும்னு அடம் பிடிப்பாங்க.சில நேரம் ஆளு பத்தலன்னு தோப்புக்குள்ள போய்தார் தூக்கி தோளுல வச்சி விடனும்.நாளு தார் தூக்கும் பொழுது மலைப்பு தெரியாது.நாற்பது தார் தூக்கி விடும்பொழுதுதான் இடுப்பெழும்பு சதிராட்டம் போடுறது தெரியும்.அன்னைக்கு முழுக்க கிண்ணுகிண்ணுன்னு வலி நிமித்தி நிமித்தி ஆள படுக்க வைக்கும்.மேரி ஆளுங்க கெட்டி. மூர்த்தி கல்லணை ஆளுங்கண்ணா ரொம்ப துள்ளுவான். அடிச்சி பிடிச்ச மாதிரி,ஆம்பள ,பொம்பள அத்தனையும் கல்லணை மாதிரி முறுக்கா இருப்பாங்க.ராஜாக்கண்ணு பார்வை மேரி மாரை குறிச்சிக்கிட்டே இருந்தது.வேலை நேரத்துல பாய்ச்சல் எதுக்குன்னு மேரியும் அடக்கி வாசிச்சா. ”..இந்த தோட்டத்து பழம் எம்மாம் பெரிசு..” ராஜாக்கண்ணு பேச்சும் நிக்கல.பேச்சு பெருத்தா மூஞ்சி சிறுக்கும்,மூஞ்சி சிறுத்தா மேரி என்ன பண்ணுவான்னு எல்லாருக்கும் தெரியும்.அதுக்கும் நேரம் பொத்துக்கிட்டு ஊத்துச்சு.வண்டி வலது பக்கத்துல நின்னு பீடிஉள்ள இழுத்து புகைய வெளிய இழுத்துக்கிட்டிருந்தான்.மூர்த்திக்கு அப்பொழுதே சந்தேகம்.ஏன் மேரி அட்டி அடுக்க மேல ஏறினான்னு.அது நடந்து போச்சு.அட்டி அடுக்குற சாக்குல வண்டி உயரம் தாண்டி மேல நின்ன அட்டியில இருந்து ஒரு குலையை அப்படியே நங்குன்னு போட்டாப்பாரு. ராஜாக் கண்ணு சேத்துல முழுங்கி எந்திரிச்சான்.ஆவேசம்னா ஆவேசம்.ஆனா எதுவும் பேசல. வண்டி உள்ளவும் ஆளுங்கள ஏத்தல.வாழைக்காய்க்கு மேலதான் மேரி ஆளுங்க வந்தாங்க.தண்டனைய வழியில காட்டினான்.உழைச்ச களைப்புக்கு எப்பவும் புதுக்கோட்டை தாண்டி கீரனூர் முருக விலாஸ் புராட்டா அடிச்சாதான் நிம்மதியா இருக்கும் மேரிக்கு.எங்கியும் நிறுத்தல.அவசரமா லோடு போவணும்னு சொல்லி,கல்லணைக்கு முன்னாடி இருக்குற பிரிவுலயே எறக்கி விட்டுட்டு வந்துட்டான் ராஜாக்கண்ணு. ”...பறச்சிக்கு எம்புட்டு திமிரு..அடுத்தவாட்டி கழுதய வாழைத்தோப்புல உட்டு நவுத்துறனா இல்லையான்னு பாத்துக்க...” ராஜாக்கண்ணுவின் சப்பை முகத்தில் கோபம் வீங்கி கிடந்தது.மூர்த்திக்கு அவனது செயல் அருவருப்பாக இருந்தது. புக்கிங் அலுவலகத்தில் நடைமுறை முடித்து வண்டி பறந்தது இரவை புள்ளிக் கோலங்களால் நிரப்பிக் கொண்டு.விருத்தாச்சலம்,நெய்வேலி,குறிஞ்சிப்பாடி வரைக்கும் அங்கங்க கடைகளின் கொள்முதலுக்கு ஏற்றபடி வாழைகுலை இறக்கி முடிந்தது.சாமத்தை தின்று செரித்ததடி யமனாக பயணபாகத்தை சுற்றியபடியே இருந்தது அனல்மின்நிலைய புகை.வண்டி லோடு இறக்கி முடித்ததும் வண்டியின் பாடியை கூட்டி சுத்தம் செய்து தார்ப்பாய் மடித்து கேபினில் இறுக்க கட்டி காத்திருந்தான் மூர்த்தி.தொழுதூர் பிரிவு வரை பம்மி பதுங்கி வந்த வண்டியின் உற்சாகம் தொழுதூர் பிரிவில் கைப் போட்ட அம்மாவும் பெண்ணையும் கண்டு விழித்தது. வண்டியை நிறுத்தியதும் மூர்த்தி இறங்கி வழக்கம் போல வண்டி டயர்களை தட்டிப் பார்த்து விட்டு காற்றை சோதித்து விட்டு வண்டியில் ஏறினான்.ஓட்டுனர் இருக்கையின் பின்னால் ஒளிரும் இருளில் பாய்ந்தோடும் நதியின் சிணுங்களோடு மந்தகாச புன்னகையுடன் அவள். மூர்த்தி தேய்த்த இருக்கைக்கு பின்னால் அழுக்கு மெத்தையில் வெத்தலைமணத்தோடு அவள்.இருவரும் தாயும் மகளும்.அப்படி இருக்கவும் கூடும்.அல்லது இல்லாதிருக்கவும் கூடும்.வண்டியின் கேபினில் வண்டியை இயக்கும் அனைத்து நரம்புகளும் புடைத்துக் கிடந்தன.அடர் இருள்.எதிரே வாகனங்கள் அவ்வப்பொழுது நிலாபந்துகளை கொண்டு வந்து வீசி எறிந்து விட்டு சடார் சடாரென மறைந்து கொண்டிருந்தன.அவ்வலவு கடுமையாக வீசியும் அப்பந்துகள் ஒளியை மட்டுமே வீசி விட்டு சாலையெங்கும் மரணித்துக் கொண்டே இருந்தன தனது சடலம் யாருக்கும் தட்டுப்பட்டு விடாதபடி. வாகன ஓட்டுனர்களின் வழக்கமான அனுபவபிரதிகள் இவை என்றாலும் மூர்த்திக்கு புதிது.அவன் அதற்கு முன்பு வேலை பார்த்த நாமக்கல் வண்டியின் முதலாளி சொல்லியிருக்கிறார். ”வண்டி லட்சுமிடா...இவனுங்க பொச்சடகி இருக்கானுங்களான்னு பாரு..இல்லன்னா என்கிட்ட சொல்லி உட்று. இஞ்சின் பெல்ட் எடுத்து வாரி உட்றுவம்” நாமக்கல் வண்டி தமிழ்நாட்டில் இருந்து வடக்கே பஞ்சாப் வரை சென்று வர பதினைஞ்சி நாள் ஆகும்.ஆனால் அவனது பழைய முதலாளியிடம் வேலை செய்த யாரும் லட்சுமிக்கு துரோகம் செய்யவில்லை.ராஜாக்கண்ணு ஒரு நாள் நடைக்கே செய்கிறான். ராஜாக்கண்ணுவிற்கு இன்னமும் மேரியின் மார்பு மனதை அழுத்திக் கொண்டே இருப்பதை வழித்தடமெங்கும் கண்டு வந்த மூர்த்தி இராப் பறவைகளின் ஏற்றத்தை பழகிக் கொண்டான்.ஆனால் அந்த பெண்கள் அப்படியிருக்க முடியாதென்றே அவன் நினைத்தான். ஏறியவர்கள் இறங்கும் இடத்தை சொல்ல வில்லை.இவர்களும் கேட்க வில்லை.யாரும் பேசிக்கொள்ளவும் இல்லை.மனம் கிழித்து எவ்வளவு நேரம் தான் ஓரக்கண்ணால் பார்ப்பது.உழைப்பின் அழுப்பில் கிளினர் பலகையில் குறுக்கி உறங்க ஆரம்பித்தான் மூர்த்தி. சாலை பாம்பாக மாறி நெளிந்தபடியே இருக்க,மூர்த்தியும் ராஜாக்கண்ணுவும் மகுடிகளோடு திரிந்தார்கள்.பாம்பு பெரிதாகி அவர்களதுலாரியை விழுங்க் கொண்டிருக்க,மகுடியின் கடைசி நூனியும் பாம்பின் நாவில் சுழன்றடிக்கமூர்த்தியை பாம்பு விழுங்கத் தொடங்கியது.அவனது உடல் அவனது அனுமதி இன்றியே பாம்பின் உடலுக்குள் நெளிந்து நெளிந்து சென்றது. மூர்த்திக்கு கண் இருட்டியது.விடாப்பிடியாக கண்ணை கசக்கி எழுந்தான்.சாலையில் லாரி தனது வழக்கமான வேகமற்று ஊர்ந்து கொண்டிருந்தது.கேபின் இருட்டாக இருந்தது.தனக்கு பின்னால் அந்த அம்மாள் உறங்கிக் கொண்டிருந்தாள்.அவளது வாயிலிருந்து வெற்றிலை கொடி சிகப்பாக வழிந்து தொண்டையை கடந்து கொண்டிருந்தது.மூர்த்தியின் பார்வை ஓட்டுனரின் இறுக்கைக்கு பின்னால் இருந்த பாவையை தேடியது.இருட்டில் அவள் ஓட்டுனர் இருக்கையை ஒட்டி அமர்ந்திருந்தாள்.அவலது கைகள் ஓட்டுனரின் இடுப்பை நோக்கி நீண்டிருந்தது. வண்டியின் வேகம் அதிகரிப்பதும்,குறைவதுமாக ராஜாக்கண்ணுவின் முகத்தில் இழையோடிய காமநரம்புகளின் கதறலால் அறிய முடிந்தது.மூர்த்தியின் புலன்கள் விழித்துக் கொண்டன.வண்டியின் பானட்டை மீறி கொதிக்கும் வெப்பம் கேபினில் தகித்துக் கொண்டிருந்தது.வெப்பத்தையும் எரியூட்டி கொதிக்க வைத்துக் கொண்டிருந்தார்கள் ராஜாக்கண்ணுவும் இராப்பெண்ணும். பாடாலூர்க் காட்டின் நடு மையத்தில் கிழித்த சாலையின் ஒரு புறம் வண்டி நின்றது.வழிந்த கோட்டை சேலையில் துடைத்தபடி எழுந்தாள் மூர்த்தியின் பின்னிருந்த அம்மா.ஓட்டுனரின் பின்னிருக்கையில் இருந்த இராப்பெண் தனது ஜாக்கெட்டை முடி இருக்க வில்லை.கச்சை மார்புகளுக்கு மேலே இருந்த படி மாரை வெளியே பிதுக்கி இருந்தது.அவள் மூர்த்தியை கண்டு கொள்ளவே இல்லை.வண்டி நின்றதும் நடக்கும் டயர் தட்டி பார்க்கும் சம்பிரதாய அரங்கேற்றத்தை நிகழ்த்த மூர்த்தி சென்றான்.அவனது காதுகளை அங்கேயே விட்டு விட்டு. யாரும் காட்டின் உள்ளே நுழைய வில்லை..பேச்சு மெலிதாக தொடங்கி சூடாகிக் கொண்டிருந்தது.இது பேச்சுக்கான நேரமில்லையே.. ”..நூறு ரூவாய்க்கு சல்லிப் பைசா குறைக்க மாட்டேன்..” கிளினர் இருக்கைக்கு பின்னிருந்த வெற்றிலையம்மா பேசினார். ராஜாக்கண்ணு ஒரே பதிலாகத் தந்தான் ”..20 ரூவாய்க்கு மேல ஒரு பைசா தர முடியாது...” ”..எம் புள்ள மூஞ்ச பாரு..” ”..இருட்டுல மூஞ்ச பாத்து என்ன செய்றது..” “..சரி..உனக்கும் வேணாம்..எனக்கும் வேணாம்..80 ரூவாக்குடு...” ”..முடியாது..இருவதுக்கே ஜாஸ்தி...” “..யோவ்..தொழுதூர்ல இருந்து அஞ்சு வண்டியாவது மாறி இருப்பேன்யா...இன்னேரத்துக்கு மூன்னூறு ரூவா பாத்துருப்பேன்..உனக்கு ரெண்டு வாட்டி செஞ்சு விட்டேன்..” இராப்பெண் தான் முதல் முறையாக வாய்த் திறந்தாள். ”..அதுக்கெல்லாம் காசு தர முடியாது..இப்ப மேட்டருக்கு மட்டும் தான்...” மூர்த்திக்கு அருகில் செல்வதா அங்கேயே நிற்பதா என்கிற குழப்பம்.ராஜாக்கண்ணு பிடிவாதமாக இருந்தான்.இராப்பெண் தயங்கியபடியே இருந்தாள். ”..ஒரு ஐம்பது ரூவாயாவது குடு..” ”..முடியாது...இருவதுதான்..நல்லாருந்தா ரெண்டுரூவா சேத்து தரேன்...” அவளை வேகமாக காட்டிற்குள் இழுத்தான்.அவள் உறுதியாக நின்றாள்.ராஜாக்கண்ணுவால் இழுக்க முடியவில்லை. ”..ஐம்பது ருவான்னா..” ”..ஏய்..” மூர்க்கமாக இழுத்தான் ராஜாக் கண்ணு.கிளினர் இருக்கைக்கு பின்னிருந்த அம்மா அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். ”..ஐம்பது ரூ..வா...” இராப்பெண் சொல்லி முடிக்க சட்டென கையை ஓங்கிக் கொண்டு ராஜாக்கண்ணு, ”..ஏய்...அறைஞ்சன்னா...வாடி..நான் யார் தெரியுமில்ல...தஞ்சாவூர் கள்ளன்டி..கொன்னுடுவேன்..வந்து படுடி...” அந்தப் பெண் தனது தாயை பார்த்தாள்.தாய் வேகமாக வந்து வெற்றிலையை பளிச் சென கீழே துப்பி விட்டு,சேலையை தூக்கி சொறுகியபடி எட்டி ராஜாக்கண்ணுவின் இடுப்பு விலாவில் ஒரு உதை விட்டாள்.கனமான உதை.மழுக்கென்றது. ”..எச்சப் பொறுக்கிக்கு சாதி ஒரு கேடு..” மூர்த்தி ஓடி வந்து பார்த்தான் .ராஜாக்கண்ணு பள்ளத்திலிருந்து எழுந்துவர முயன்று கொண்டிருந்தான். இராப்பெண்,தனது அம்மாவுடன் எதிர் சாலையில் நடந்து கொண்டிருந்தாள்.சாலையெங்கும் நிலா பந்துகள் ஓடி ஓடி வந்து விழுந்து ஒளிபாய்ச்சி சுவடற்று இறந்து கொண்டிருந்தன.இரண்டு நிலாக்கள் வேகமாக ஓடிவந்து மூச்சிரைக்க நின்றன. அவர்கள் ஏறினார்கள். நன்றி : யாவரும்.காம்

வெள்ளி, 24 ஜூன், 2016

இப்படி நேருமென யாருக்கும் தெரியாது.


இப்படி நேருமென யாருக்கும் தெரியாது. பெங்களூரின் நடுமத்தி அந்த இடம்.வானம் பற்றி எறிந்து அணைந்த நிலையில் புகைமூட்டமாக இருண்டிருந்தது.அதன் வெண்ணிறங்கள் புகையோடு கலந்து பசையாக நிலமெங்கும் தொங்கிக் கொண்டிருந்தது பனி.சாலையோர தூங்கு மூஞ்சி மரங்களின் கிளைகள் பனியில் நனைந்து வெட்டப்பட்டு அந்தரத்தில் தனித்தனியே நின்றிருந்தன வெண்ணிற நிழல் போல. நிலமெங்கும் பனியின் கவிழ்ப்பு படர்ந்திருந்தது.வாகனங்களில் வருவோர் போவோரும் அதிர்ந்து பார்த்துச் சென்றார்கள்.திடுதிப்பென நடந்ததால் யாராலும் எதுவும் செய்ய முடியவில்லை.பல வண்டிகள் என்ன செய்வதென தெரியாமல் குவிந்து பின் கிடைத்த வழியில் ஒதுங்கி திட்டியபடியே சென்றார்கள்.சிலர் வண்டியை சுற்றி வந்தார்கள்.கிளினர் பலகையை விட்டு தொப்பென குதித்தோடிய மூர்த்தி லாரிக்கு அடியில் படுத்தான்.அவனுக்கு புரிந்து விட்டது.இது எளிதான பிரச்சனை இல்லை.லாரியின் கீர்பாக்ஸ் துண்டாக தரையில் விழுந்து வண்டியின் நகர்வுக்கு ஏற்ப பத்து அடி துர தார்ச் சாலையை கிழித்து உழுதபடி தார்க் கட்டிகளோடு மோதி திகைத்து நின்றிருக்கிறது.அவ்வளவுதான். இளங்கருமை புகுந்த நகரத்தின் தூங்குமூஞ்சி மரங்கள் இலையுதிர்த்து பரவிக்கிடக்கும் சாலை அது. ஓசூரிலிருந்து வட மானிலங்களுக்கு செல்ல லாரிகள் பெங்களுரின் உள் சாலைகளை கடந்துதான் செல்ல வேண்டும்.சாதாரணமாக பெங்களுர் வாகன நெரிசலில் விழி பிதுங்கும். ராஜஸ்தானிலிருந்து வெட்டியெடுக்கப்பட்டு அறுக்கப்பட்ட நீள நீளமாக மார்பிள்களை ஏற்றீயபடி 5 நாட்களை கடந்து வந்த ’’தென் பாண்டியன் ”தனது செயலை இழந்து விட்டது. இந்த வண்டிக்குவைத்த பெயர் “தென் பாண்டியன்”.வண்டிக்கு குலப் பெயர் ஒன்றுண்டு. முத்தைந்து ஆயிரம் எடை பொருட்களை சுமக்கும் டாரஸ் என்கிற பத்துச் சக்கரம் பூடிய தேர்.இதன் பாகன் ஒட்டுனர் ராமசாமி, வெள்ளை கெளபாய் குள்ளாயை ஒரு பக்கம் மடக்கி தலையில் இருத்தியிருந்த கர்நாடக காவலரிடம் வகையாக சிக்கியிருந்தான்.அவர் ஒடி வந்த வேகத்தில் தொப்பையும் தொப்பியும் கழண்டு விழுந்து விடலாம் எனத் தோன்றியது.இடுப்பு பெல்ட்டை இரு முறை இறுக்கிக் கொண்டபடியே ராமசாமியிஒடம் ஆவேசமாக கத்திக் கொண்டிருந்தார்.ராமசாமி ஓட்டுனர் இருக்கையை விட்டு இறங்கலாமா வேண்டாமா என்று குழப்பத்தில் “சார்..சார்..சார்” என்று கெஞ்சிக் கொண்டிருந்தான்.மூர்த்தி பதட்டமாக ராமசாமியை தேடி ஓடி வந்தான். ..” ராமா..கீர் பாக்ஸ் எறங்கிடுச்சு...” ”..அய்யோ...” ராமசாமி தலையில் கை வைத்ததை பார்த்து கர்நாடக காவலரே தனது வேகத்தை சுருக்கிக் கொண்டார்.பொதுவாக இந்தியாவின் எந்த பாகத்திற்கு லாரிகள் சுமையேற்றி சென்றாலும் அவர்களுக்கு,தமிழ்நாடு,ஆந்திரா,கர்நாடகா,கேரளா வண்டிகள் மதராசி காடியாகவும்,ஆட்கள் மதராசிகளாகவும் தான் தெரிவார்கள்.இந்த மதராசி காடிவாலாக்கள் பஞ்சாபியர்களை தவிர்த்து அனைத்து இந்திய பாக மக்களாலும் வெறுக்கப்படுபட வேண்டியவர்கள்,இராவண மிருகங்கள் என்பதான மனநிலையே இருக்கும்.இந்த கணக்கு தென் இந்திய பகுதிகளுக்கு. ஆனால் டிஎன் என்கிற எண் கொண்ட வண்டிகள் என்றால் கன்னடர்களால்,குறிப்பாக கர்நாடக காவல்துறை,ஆர்டிஓ க்களால் கேவலமாக நடத்தப்படுவது,மிகக் கடுமையாக அடிப்பது,பெரும் பணத்தை கறப்பது என ஒரு நிலை இருந்தது.ஆனால் இந்த காவலர் அப்படியில்லை.உடனடியாக பணியில் இறங்கினார்.பின்னால் அலறும் பலவகை வண்டிகளின் எரிச்சலான ஒலியெழுப்புதலும் கூடுதல் காரணமாக இருக்கலாம்.அது கொஞ்சம் பள்ளத்தை நோக்கிய சாலையாக இருந்ததால் வேலை சுலபமானது. மூர்த்தி வண்டியின் கேபினிலில் ஏறி தார்ப்பாயை கட்டும் கயிற்றைக் எடுத்துக் கொண்டு வண்டிக்கு அடியில் மீண்டும் அடியில் பாய்ந்தான்.வண்டியின் அடிப்பகுதி செம்மண் படிந்து இரத்தம் காய்ந்து வெடிப்பு விட்டது போல அங்கங்கே உடைந்து வண்டியின் அடிப்பாகங்கள் தெரிந்தன.ஆல்மட்டி டேம் கட்டுகிற இடத்தினருகில் தான் கிட்டதட்ட நூறு கிலோ மீட்டருக்கு மேல் தார்ச் சாலை செம்மண் கோடாக நீண்டிருந்ததை நினைவுக்கு கொண்டு வந்தான் மூர்த்தி. வண்டியின் வேக அளவை கூட்ட,குறைக்க பயன்படும் விசையின் தொடக்கம் லாரியின் கேபினில் இருந்தாலும் அது பல்வேறு அடுக்குகளைக் கடந்து லாரியின் அடிப்பகுதியில் முதுகெழும்பைப் போல குழலாக நீண்டு பின் சக்கரத்தை இணைக்கும் தண்டில் மனித குண்டியை போல சட்டியாக குமிழ்ந்து கிடக்கும் கோளத்தில் தான் விசை மாற்றியின் இணைப்பு இருக்கும் அந்த கோளத்தின் உள் பகுதியில் இயந்திரங்கள் ஓட்டுனர் இருக்கையில் இருந்து விசையை மாற்றும் பொழுது கோளத்தின் இயந்திரங்கள் அதன் வேகத்தை ஏற்றி இறக்கி சக்கரத்தை வேகப்படுத்தவும் குறைக்கவும் செய்யும்.அந்த இடத்தில் தான் தண்டு வடம் கோளத்தின் உள்ளிருக்கும் பாகங்களை இழுத்து தரையில் போட்டிருந்தது.அதை வடக்கயிறு கொண்டு காலால் உந்தி வெறி கொண்டு இழுத்துக் கட்டினான் மூர்த்தி.தரையில் இருந்து தண்டு வடம் சற்றே மேழெழுந்து நிற்க,அவசரமாக ராமசாமி வண்டியை இறுக்கி பிடித்து நகர விடாமல் வைத்திருக்கும் காற்று அழுத்தியின் விசையை விலக்கி ,தடையில் காலை மேலே தூக்க வண்டி லேசாக குலுங்கியது.வண்டியை ஒட்டி வேடிக்கை பார்த்த கும்பலை பின்னால் இருந்து தள்ளச் சொன்னார் காவலர்.வண்டி பள்ளத்தில் மெதுவாக நகர,வட்ட ஒடிப்பானை இடது பக்கம் ஒடிக்க வண்டி மெல்ல யானை தன் முகத்தை திருப்பி கடைக்குள் இருக்கும் வியபாரியிடம் பிச்சையெடுப்பது போல நடைபாதையோரம் நகர்ந்தது. ”வரலாம்..வரலாம்..ரைட்..” இடது பக்கமிருந்து சொல்லிக் கொண்டு வந்த மூர்த்தி ”ரைட்ல ஒடி..ரைட்ல ஒடி..”எனக் கத்த, தேரை நிலைக்கு கொண்டு வந்தான் ராமசாமி.கூடியிருந்த கூட்டம் மலையை முடிக் கொண்டு இழுத்தது போல ஆரவாரித்தது.காவலர் வெற்றிப் பெருமிதத்துடன் ராமசாமியை கீழே இறக்கினார்.ராமசாமிக்கு புரிந்தது.காவலர் மக்களை கலைந்து போகும்படி சொல்லி விட்டு,ராமசாமியை ஏற இறங்கப் பார்க்க,ராமசாமி அவரை வண்டியின் முன் பக்கம் சாடை காட்டி அழைத்து,இருநூறு ரூபாயைத் திணித்தான்.காவலர் சட்டென வாங்கி பேண்ட்டில் வைத்துக் கொண்டே கிளம்பினார்.. ”ஓய்..இரைவரு..பெத்த ஆபிசரு..கம்மிங்..கம்மிங்...நீரு கோயிங்..கோயிங்...ஆவுனா,..” ராமசாமிக்கு அடுத்த தலைவலி ஆரம்பித்தது.ஜெய்ப்பூரிலிருந்து இந்த நடை வந்ததிலிருந்தே பிரச்சனைதான்.பின்னத்தி வெளிச்சக்கரம் இரண்டு முறை ஆணியடித்து வழியில் வேலையை காட்டி விட்டது.உபரி சக்கரத்தை கழட்டி மாட்டி லாரியை கிளப்பி வந்தது பாடென்றால்,மகாராட்டிரா சிற்றுரில் நாகாவிற்கு(நாகா என்பது ஊராரால் தடுப்பு வைத்து வரும் வண்டிகளை நிறுத்தி பணம் வசூலிக்கும் முறை) போக்கு காட்டி நான்கு ரூபாயை மிச்சம் பிடிக்க போய் , பின்னால் விரட்டி வந்த ஆள் ஊரின் அடுத்த எல்லையில் மடக்கி தர்மஅடி கொடுத்ததுமில்லாமல் நூறு ரூபாயை பிடுங்கி விட்டான்.இப்பொழுது லாரியின் கீர்பாக்ஸ் .தொல்லை மேல் தொல்லை. ராமசாமி குழம்பிக் கிடந்தான்.மூர்த்தியை வண்டியில் இருக்க சொல்லி விட்டு ,நாமக்கல்லில் இருக்கும் முதலாளிக்கு வாடகை தொலைபேசி கடையில் இருந்து பேசி,விசயத்தை சொன்னான்.முதலாளி ”ஓத்தாம்பாட்டை” அள்ளி வீசினார்.வழக்கமாக டாரஸ் ஏற்றும் எடை என்பது 16 டன் என தமிழ்நடு போக்குவரத்துத் துறையின் சட்டமிருந்தது.வடக்கே வண்டி போய் வர ஒரு நடைக்கு பதினைஞ்சிலிருந்து பதிநேழு நாட்களாகும்.லோடு கிடைக்கா விட்டால் இன்னும் குடுதல் நாட்கள் கூட ஆகலாம்.பதினாறு டன் எடை ஏற்றினால் வழியில்,பாலம்,நாகா,ஆர்டிஓ,ஒவ்வொரு மானில எல்லை,இடையில் காவலருக்கு அழுதது போக,ஏற்ற இறக்கமான டீசல் விற்பனை,பஞ்சர்,டிரைவர்,கிளினர் பேட்டா,லாரி புக்கிங் அலுவலக கமிசன்,லோக்கல் டிரவர் பேட்டா,வண்டிக்கு ஒரு நடைக்கு ஒரு முறை செய்யப்படும் மேலோட்டமான சர்வீஸ், டயர் தேய்மானம் என அனைத்தையும் கணக்கில் கொண்டால் உழுதவன் கணக்கு தான் இந்த மோட்டார் தொழிலிலும்.தெரியாத பிசாசுக்கு பதில் தெரிந்த பேயே மேல் என்று தான் இந்த தொழில் ஓடிக்கொண்டிருகிறது.எப்பொழுதாவது விபத்து ஒன்று நிகழ்ந்தால் இந்த சிறு முதலாளிகள் தலையில் துண்டுதான் விழும்.அதனாலேயே பல முதலாளிகள் வண்டி நாமக்கல்லினுடையது என்றாலும் ஹரியானா போக்குவரத்தில் முழு இந்தியா பதிவெண்னை வாங்குவார்கள்.ஹரியானா பதிவெண் என்றால் இருபத்தியெட்டு டன் வரை எடை ஏற்றிக் கொள்ள அனுமதி உண்டு.ஆனாலும் வண்டி தமிழ்நாட்டினுடையது என அதன் தோற்றம் அடையாளம் காட்டும்.லாரிகளில் ஒவ்வொரு மானிலமும் தன்னுடைய அடையாளத்தைக் கொண்டிருக்கும்.லாரிகளின் தனித்துவம்,பண்பாடு ,கலாச்சாரம்,மற்றும் எடை ஏற்றிக்கொள்ளும் அளவு கூட தேசிய இன மனதோடுதான் இருக்கும்.ஹரியானா பதிவெண்ணுக்கு இருபத்தியெட்டு டன் ஏற்றும் நிலை இருந்தாலும் முதலாளிகளின் பேராசை ஓய்வதுமில்லை.ஒரே நாளில் உழைப்பால் உயரும் உத்தமர் கதைகள் அவர்கள் நிறையக் கேட்டிருப்பார்கள் போல.முத்பத்தியிரண்டு டன்னிலிருந்து முத்தியாறு டன் வரை ஏற்றி வரும்படி ஓட்டுனர்களிடம் அடம் பிடிப்பார்கள்.இந்த அதிக கொள்ளளவு ஏற்றும் பொழுது வண்டி திணறும்,சில மானில எல்லைகளில் தொந்தரவாகும்,கூடுதல் எடைக்கு டன்னுக்கு ஆயிரம் ரூபாய் வரை கறக்கவும் சிலர் முயல்வார்கள்.இதனால் சில மானில எல்லைகளில் குறுக்கு வழியாக மானில எல்லையை கடந்து வரும் சாகச நிகழ்வுகளும் இடம் பெறும்.இத்தனையும் கடந்துதான் இந்த ஓட்டுனர் வாழ்க்கை.முதலாளியின் வழக்கமான இந்த திட்டுகள் பலகிப் போன ஒன்றுதான்..ஆனால் கீர்பாக்ஸ் இறங்கியிருப்பது பெரும் செலவு பிடிக்கிற வேலை.மெக்கானிக் வந்து சரி செய்தாலும் நாமக்கல்ல் சென்றதும் மீண்டும் கழ்ட்டி மாட்டும் வேலையில் மூன்று நாட்களை தின்று விடும்.பட்டறையில் பேசி விட்டு வருவதாகவும் பத்து நிமிடம் கழித்து அடிக்கும் படி முதலாளி சொல்லி விட்டு தொலைப்பேசியை வைத்து விட்டார். ராமசாமிக்கு பசி கண்ணை அடைத்தது.விடியற்காலை தாவணிக்கரை சின்னாற்றில் குளித்துவிட்டு, தமிழர் கடையில் அடுக்கிய இட்லி கரைந்து காற்றில் வெளீயெறி விட்டது.அவ்வப்பொழுது குடித்த தேனீரும் தீர்ந்து நாவறண்டுக் கிடந்தது.பெங்களூரை தாண்டிப் போய் சாப்பிடலாம் என நினைத்து வண்டியை அடிச்சி விரட்டியும் 28 டன் எடையை ”ஹ்ம்ம்..ஹ்ம்ம்..”என அரைத்து தேய்த்தபடி வண்டி உருண்டதும்,பெங்களூரின் உலகலாவிய ட்ராஃபிக்கும் மாலை ஐந்து மணியை தின்று,ராமசாமியின் வயிற்றையும் செரிக்கடித்திருந்தது. தொலைபேசிக்கடைக்கு அருகில் இருந்த தேனீர்க் கடையில் ஒரு பன்னையும் தேனீரையும் வாங்கி ஐந்து நாட்கள் களைப்பை போக்க முயன்று கொண்டிருந்தவன் தன்னை யாரோ கவனிப்பதை உணர்ந்து நிமிர்ந்து பார்க்க,எதிரே வெண்ணையை உருட்டி தேனில் குழைத்து உருவம் நெய்தது போல ஒரு பெண் முறைத்தபடி நின்றிருந்தாள்.அவள் முகத்தில் அந்நேரத்தில் சட்டி வைத்து வடை பொரித்து விடலாம்.அவ்வளவு கொதி நிலை.அழுக்கும்,கரியும் புறண்டு கிடந்த கைலியும்,காலர் கரூப்பேறி பலநாள் ஆன சட்டையும் போட்டு,பரட்டைத் தலையுடன் நின்று வேகமாக முழுங்கிக் கொண்டிருந்த ராமசாமியை அவள் பைத்தியக்காரன் என பார்த்திருக்கக் கூடும்.நடைபாதையில் நின்றிருந்த அவனை எப்படி நகரச் சொல்வது எனத் தெரியாமல் விழி பிதுங்க பத்திரகாளியாகி நின்றிருந்தாள் அவள். ராமசாமி சட்டென நிமிர்ந்தவன் பதறி..”க்கியா” என்றான்.அவளுக்கு எதுவும் புரியவில்லை.அவளது கைகள் தானாகவே அவளது மூக்கை பிடித்துக் கொள்ள,ராமசாமி பதறி விட்டான்.. ”.ம்மோவ்..இது..கரி..காடி..மே..” அவன் முடிக்க வில்லை.அவள் சட்டென கீழ் பகுதியில் இறங்கி ஓடி விட்டாள்.ராமசாமிக்கு புரிந்தது.சுற்றிப் பார்த்தான்.எல்லோரும் தன்னையே பார்ப்பது போலிருந்தது.தாங்க முடியவில்லை.வேகமாக அங்கிருந்து நகர்ந்து தொலைப்பேசிக் கடையின் அருகில் சென்று எல்லோரின் பார்வையிலிருந்து முகத்தை மறைத்துக் கொள்ள முயன்றான். அழுக்கு லுங்கியும்,கரியுடலும் அவனுக்கு மோட்டார் தொழிலுக்கு வந்த பொழுது புதுசு . மலைக்கடை கிரசர்க்காரன்கிட்ட அடமானத்துக்கு மூன்றாயிரம் வாங்கி,கேணி மோட்டு நெஞ்சுமுட்டி மூத்த மகள் திருமணத்துக்கு சீரு செஞ்சது போக இரண்டு பன்னிக் குட்டி வாங்கி, ஆயித் தோப்புல விட்டுப்புட்டு,அரசு பாக்கெட் சாராயத்தை புருசனும் பொண்டாட்டியுமா இராப்பகலா குடிச்சதுல, குடல் வெந்து செத்துப் போனார் ராமசாமியின் அப்பா.பன்னிக்குட்டி மேச்சுக்கிட்டு பன்னி விட்டை பொறுக்கி,எரு சேத்து வித்துக்கிட்டிருந்த ராமசாமியின் அம்மா வேற வழியில்லாம கிரசர்க் காரன் கடனுக்கு,பன்னிக்குட்டியையும்,எட்டு வண்டி பன்னி விட்டையையும் வித்தும் தேறாம கடன் கழிக்க,கல்லுடைக்க போனாள்.குன்னுமேட்டு தெருவுல பாதி பேரு இப்படித்தான். கிரசர்காரன்கிட்ட கல்லுடைக்க போய் கடன் அடைச்ச பாடில்லை.பன்னிக் குடிசையை விட கொஞ்சம் உயமான குடிசைதான் குன்னு மேட்டுத் தெருவுல எல்லா வீடும்.அம்மா கல்லுடைக்க காலையில போனா நட்சத்திரம் பன்னிக்குட்டையில விழுகுற நேரத்துலதான் வருவா. பள்ளிக்குடம்னா ராமசாமிக்கு உயிர்.எக்கேடு கெட்டாலும் பள்ளிக்கூடம் மட்டும் போகாம இருக்க மாட்டான்.அதிலயும் சோத்துக்கு வழியில்லன்னாலும் பக்கோசு கடையில் ”ரீகல் சொட்டு நீலம்” வாங்கி,பள்ளிக்கூடம் போட்டுக்கிட்டு போற வெள்ளை சட்டையை நீலம் போட்டு ”சொட்டு நீலம் டோய்..ரிகல் சொட்டு நீலம் டோய்..” பாட்டெடுத்து ஊதா நிறத்தில் பள்ளிக்கு போவான் ராமசாமி.சட்டையில் பொத்தானுக்கு பதில் ஊக்கு குத்தியிருப்பாங்கறது வேற விசயம்.அவ்ளோ சுத்தக்காரன். பன்னிகுடிசையும்,பன்னிக்கூண்டும் நம்மள விட்டு போவனும்னா நல்லா படிக்கணும்னு சொன்ன அம்மாவும் பத்தாம் வகுப்பை தொடும்பொழுது போய்ச் சேர,தம்பி இரண்டு பேருக்கும் வேற ஆளில்லை.திசை நாப்பதா இருக்கு,கல்லுடைக்கத்தான் போவனும்னு முடிவு செஞ்சப்பதான் மாக்கான் கைக் கொடுத்தார் அவனுக்கு.பேருதான் மாக்கான்.ஆனா அந்த ஊருலயே கொஞ்சம் விவரமா பேசுறவரு அவருதான்.அவரையும் பள்ளத்தெரு பொண்ண காதலிச்சு கட்டிக்கிட்டதுக்காக ஊரை விட்டு தள்ளி வச்சிருந்தாங்க அவரு உறமுறையை சேர்ந்தவங்க.ஆனாலும் மனுசன் கல்லு மாதிரி .இதே ஊர்லதான் இருப்பேன் .இங்கதான் எம்புள்ள வளரும்னு நெஞ்ச நிமித்தி நின்னாரு மாக்கான்.அவர்தான் ”என் கூட கிளினரா வாடா..உன் தம்பிங்க படிக்கட்டும்..படிப்பை வீட லாரி உனக்கு நல்லா சோறு போடும் “னு ராமசாமியை கூட்டிட்டு வந்தார். ராமசாமி கிளினராக ஓடியபொழுதே அவனுக்கு பெரும் சங்கடமா இருந்தது இந்த அழுக்குதான்.அவன் அழுக்கை விட்டு ஓடனும்னு ஓடினாலும் அது விடாம அவன தொரத்துது.ராமசாமியும் குளிச்சி சுத்த பத்தமாதான் இருப்பான்.என்ன குளிச்சாலும் வண்டியில ஏறி உட்காந்ததுமே அழுக்கு தானா..ஏறிக்கும்.ஆரம்பத்துல கொஞ்சம் வேதனைப்பட்டாலும் பழகிடுச்சி.இப்ப லாரிக்கு அவந்தான் டிரைவர்.காசுப் புழக்கம் நல்லா கையில புரளுது.ஆனா அழுக்கு அவன் கூடவே இருக்கு. இந்த பொண்ணு பார்த்த பார்வை அவன் நெஞ்சை தச்சிடுச்சி.முதலாளி நாமக்கல்லில் இருந்து எதிர் வண்டியில் மெக்கானிக்கை அனுப்புவதாக சொல்லி அவர்களை காத்திருக்கும் படி சொல்லி விட்டார்.மெக்காணிக் வந்து சேர்கிற வரை இங்குதான் என்பது புரிந்து விட்டது.மூர்த்திக்கு இரண்டு பன் வாங்கிக் கொண்டு போனான்.மூர்த்தி அதற்குள் வண்டியின் முன்னும் பின்னும் பத்தடி தள்ளி கல் வைத்து வண்டியின் சூழலை சாலைப் பயணிகளுக்கு புரியும்படி உணர்த்தியிருந்தான்.ராமசாமி தனது அழுக்கு சட்டைகளில் நல்லதை தேடித் தேடிப் பார்த்தான்.எல்லாம் ஒன்று போலவே இருந்தது.தேனீர்க் கடை வழிமறிப்பில் நின்ற அவளின் நீள மூக்கு ஏனோ அவனை இம்சை செய்தது. இரவுச் சாப்பாட்டுக்கு ராமசாமி போக வில்லை.மூர்த்தியை சாப்பிட்டு விட்டு ஏதாவது வாங்கி வரச் சொல்லி விட்டான்.வண்டியின் கேபினில் ஏறி தார்ப்பாய்க்கு மேல் படுத்து கடும்குளிரை போர்த்திக் கொண்டு விழித்துக்கிடந்தான்.அவனுள்ளத்தில் சிவகாமி வந்து போனாள்.அவன் தெருவில் வசிக்கும் கருத்த பெருங்கண்ணி அவள்.பணிரெண்டாவது படிக்கிறாள்.ராமசாமி ஒரு முறை ஸ்ரீநகரிலிருந்து ஆப்பிள் ஏற்றி திருச்சிக்கு வந்தான்.வரும் வழியில் ஆலத்தூர்கேட்டை கடந்து தனது ஊருக்குள் வண்டியை விட்டான்.தெரு சில்வண்டுகள் லாரியைக் கண்டு மொய்த்துக் கிடக்க,பெருசுகள் வேடிக்கைப் பார்க்க,கிணற்றிலிருந்து நீர் இறைத்து வந்த சிவகாமியின் கற்றாழைக் கண் ராமசாமி சிறுவர்களுக்கு கொடுத்த ஆப்பிளையும் ராமசாமியையும் பார்த்தது.ராமசாமியின் கண்கள் சிரிக்க,சிவகாமியின் கண்ணிழுத்துக் கொள்ள,ஆப்பிள் கன்னிப் போய் விட்டது.இராசாமியும் மடங்கி கிடந்தான் அவள் பார்வையில்.அவள் தான் அவனை இந்த பனிக் குளியலில் மிதக்க விட்டிருந்தாள். மூர்த்தி வாங்கி வைத்திருந்த சாப்பாடு அப்படியே இருந்தது.குளிர் தெளித்த வாசலில் புள்ளிக்கோலமாக துளிகள் படர்ந்திருந்தன.ராமசாமியின் முகம் விரைத்து கிடந்த தார்ப்பாய்க்குள் அழுந்திக் கிடந்தது. பன்றிகள் மூஞ்சை நீட்டிக்கொண்டு,அடர்ந்த கூர்முடிகளை சிலிர்த்தபடி வந்து முகத்தை ஆவேசமாக நக்கியபடி இருந்தது.அதன் கோரைப் பற்கள் ராமசாமியின் தாடையை தாங்கிப் பிடித்திருந்தது.நாக்கு சுழன்றபடி இருக்க,அந்த கூர் மூக்குப் பெண் அவன் முகத்தில் காறித் துப்பி ,முரட்டுக் கண்களை அவன் உடலெங்கும் வீசினாள். அவை ஒன்று பலவாகி,அவன் உடலெங்கும் ஈக்களைப் போல மொய்த்து அழுக்குச் சட்டையை தின்று அவன் அழுக்கு உடலைத் தின்று சதை,நரம்பு,குடல்,குடலிலிருந்த பண்ணையும் ஆவேசத்தோடு வெறியோடு தின்று கொண்டிருந்தது. மூர்த்தி ராமசாமியை எழுப்பினான்.மெக்காணிக் ஒரு உதவியாளனோடு வந்திருந்தான்.வேர்வையோடு மெக்கானிக் லாரிக்கு அடியில் வேலை செய்து கொண்டிருந்தான்.சாலையின் இறைச்சல் கணக்கற்ற ஓநாயாக நீண்டு அந்த சாலையில் வழிந்தோடியது.முதல் நாள் அதே நேரத்தில் சரியாக கீர் பாக்சை தூக்கி மாட்டினான் மெக்கானிக் சிவா.வேர்வையும் அழுக்கும் அனைவரையும் நாராக்கி இருந்தது.பெரும் களைப்பு அனைவரின் முகத்திலும் வழிந்தோடியது.ஓசூருக்கு முன்பிருக்கும் கர்நாடக எல்லையில் வண்டி நடை புத்தகத்தை எடுத்துக் கொண்டு மூர்த்தி ஓடினான்.வண்டி சில கிலோ மீட்டர்கள் எரும்புச்சாரியாக ஊர்ந்து கொண்டிருந்தன.எல்லைக் கணக்காளரிடம் வண்டி எண் சொல்லி பதிவு போட்டு ,அவர்களுக்கான வரும்படியை அளித்து விட்டு மூர்த்தி மெல்ல ஊர்ந்த வண்டியில் தொத்தி ஏறினான்.ராமசாமி ஆவேசம் வந்ததைப் போல தமிழ் நாட்டு எல்லைக்கு குறுக்கு வழி சாலையான இராயக்கோட்டை வழியே செலுத்தினான்.யாரும் எதுவும் பேசிக்கொள்ளாத அந்த அசந்த பொழுதில் சாலையின் புளிய மர மறைவிலிருந்து மோகினி வெளிப்பட்டாள்.மாய மோகினிதான்.ராமசாமி அடித்த பிரேக்கில் அனைவரின் தூக்கமும் வண்டிக்கு வெளியே வீசப்பட்டது. அகண்ட கண் அவள் சிவந்த வெற்றிலையை துப்பினாள்.மெக்கானிக் உறுதியாக சொல்லி விட்டான்.மெக்கானிக்குகளுக்கு மோகினிகள் அமைவது சிரமம்.நேரம் காலமற்று மெக்கானிக்குகள் இரும்போடு பிணைந்திருப்பார்கள்.எப்பொழுதாவது வெளியில் வந்தால் தான் உண்டு.சில நேரங்களில் உடல் சுட்டைப் போக்க ஆந்திரா செல்லும் வண்டிகளில் பயணித்து மோகினிகளிடம் வெப்பம் வெளியேற்றுவார்கள்.இந்த சாலையோர ஆந்திர மோகினிகள் பெரும்பாலும் இவர்களின் கரி படிந்த ,வெளியேறவே முடியாத இந்தக் கருமையை அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள்.கருமையை அள்ளி ஊடலோடும் கூடி களித்து இந்த உழைப்பாளிகளின் எண்ணம் ஏற்றுவார்கள்.மோகினி வண்டிக்குள் ஏறி அமர்ந்து தேவ உலகம் பயணிக்கத் துவங்கினாள்.வண்டியின் கேபினின் மெத்தையில் பின்பக்கமாக இருந்து மெக்கானிக்கின் கை அவளது உடலில் கரப்பானாக ஊர்ந்தது.பழுத்து தடித்து ,கருப்பேறிய மெக்கானிக்கின் கை ஊர்வை அவள் செல்லமாக நெளித்து சிரித்தாள். ராமசாமி வண்டியோட்டியபடி அவளிடம் கேட்டான். ”உம் பேரென்ன..” ”சிலுக்கு” ”எந்தூரு..?” ”மேலெருந்து வந்தா ரெண்டு மலை பிரியும்..மலைக்கு இடையில ரோடு போகும்...” ராமசாமியின் மனக் கிடங்கில் எரிச்சல் சாணியாக அடித்தது.அவனது மனமெங்கும் நீள மூக்கு கீறியபடியே இருந்தது. ”..ஏய்..ஊரைக் கேட்டா கதை அளக்கிற..” “யோவ்..கேளுய்யா..ரோடு போய் முட்டுற இடம் தொப்புளூர்..” மெக்கானிக் முனகியபடி.. “அப்புறம்..” ”தொப்புளூருக்கு கீழ எந்தூரு...குழியூருதான்...யோவ்...கதை கேட்டது போதும் அந்த மரத்துக்கிட்ட நிறுத்து...” மெக்கானிக் அவசரப் பட்டான்.ராமசாமி அவள் முகத்தில் இவன் முகத்தை தேய்த்தான்.அவள் ராமசாமி சட்டையை பிடித்து இழுத்துப் போனாள்.எல்லோரும் பதறி நின்றார்கள்.மெக்கானிக்கின் கால் வழியே வெப்பம் பரவி ராமசாமியும் மோகினியும் போன திசையை தேடி அலைந்தது. மரங்கள் மறைத்த வனம் அது.எந்த பறவைகளும்,விலங்குகளும் இடம் பெறாத வறண்ட பாலை மர வனம்.ராமசாமி அவளையே பார்த்தான்.அவள் விருவிருவென அவனை இழுத்தாள்.அவள் மூக்கு கூர்ந்திருந்தது.வெற்றிலைச் சிவந்து உதடு வெளித் தள்ளிக் கிடந்தது.பன்றிகள் மூஞ்சை நக்கின.அவள் மூக்கு கூர்ந்திருந்தது.பன்றிகள் முடியை சிலிர்த்தன.அவள் முறைத்தபடி நின்றிருந்தாள்.அவள் முகத்தில் ஒரு அசூயை படர்ந்து அவன் உடலை ஊடுருவியது.ராமசாமி அவளைப் பார்த்துக் கொண்டே இருந்தான்.அவள் இழுத்தாள் வெறியோடு. நாக்கைக் கடித்தபடி அவள் மீது ஏறினான்.அவள் ஆவேசமாக அவனை அணைத்தாள்.இறுக்கி எழும்புகள் முறிந்து விழுந்தன.அவனது தசையை,நரம்பை,குடலை ஈக்களாக அவளது கண்கள் மொய்த்தன. பண்றி,கிரசர் முதலாளி,அம்மா,சிவகாமி..அவள்..அவள்...பெங்களூரில் முறைத்த அந்த முகம்..அந்த முகம்..ராமசாமி உடலை வளைத்து முருக்கேற்றினான்.காலத்தின் அழுக்குகள் அவன் மீது கவிழ்ந்து அவனை மூழ்கடித்தன.பழமும் பாலும் பிசைந்து கொழகொழவென அவன் பிடறியில் ஊற்றி வழிய வழிய,உடலை தேய்த்து கரியை,நீல வண்ணத்தை,பச்சை திரவத்தை,வழித்து எடுத்துக் கொண்டிருந்தாள். அவன் செல்லாத கோயிலின் மந்திரங்கள் ஓதிக் கொண்டிருக்கும் குரல்களின் தீர்க்கம் ராமசாமியின் நகங்களினூடாக அவனது ஆன்மாவை கிழித்து வீசிக் கொண்டிருந்தன.ராமசாமியின் மேற்பற்களிலிருந்து இரு பற்கள் நீண்டன,மோகினியினிடையில் ஏறி அமர்ந்து நீண்ட நாக்குகளைக் கொண்டு ராமசாமி அவளது தேகத்தை நக்கத் தொடங்கினான்.அவள் திணறி,திமிற வெறியோடு சொரசொரப்பான நாக்கினால் அவளின் தசைகளை ஒரே சுழட்டில் பிய்த்தெடுத்தான்.மோகினி அதிர்ந்து போனாள்.அவளது வாயிலிருந்து வெற்றிலை இரத்தமாக வழிய வழிய அவள் அலறத் துவங்கினாள்.பலம் கொண்டு அவனை எட்டித் தள்ளி காடே அதிர இருளில் கதறியபடி உடைகளேதுமற்று அவள் ஓடிக் கொண்டிருந்தாள். மெக்கானிக்கும்,உதவியாளனும் மூர்த்தியும் வேகமாக அலறல் வந்த திசையில் ஓடி வந்தார்கள் .ராமசாமி நின்று கொண்டிருந்தான்.அவனது முகம் சாந்தமாகியிருந்தது.எல்லாக் காலத்தின் அழுக்குகளையும் துடைத்து விட்டிருந்தான்.தனது உடலை பார்த்தான் கருமை ஒரு பூரிப்போடு கிளர்ந்து அவனை பார்த்து சிரித்தது. ”டேய்..ராமா இப்படிப் பண்ணிட்டியேடா...இனிமே..நான் என்னடா பண்ணுவேன்...எந்த சந்துலடா வச்சுக்கறது...அப்படி அவ ஓடுற அளவுக்கு அவள என்னடா பண்ணுன...” மெக்கானிக் கேட்டுக் கொண்டேயிருந்தான்.நிதானமாக நடந்து சென்று லாரியில் ஏறி அமர்ந்து, ஹாரன் அடிக்க ஆரம்பித்தான் ராமசாமி. நன்றி : யாவரும்.காம் http://www.yaavarum.com/archives/3379

வெள்ளி, 15 மே, 2015

காற்றை கிழித்த பாட்டு - சிறுகதை


காற்றை கிழித்த பாட்டு - கீரா 80 வயசு பெரியம்மா இறந்து விட்டார் . செய்தி இரவு பதினோரு மணிக்கு வந்தது.. நீண்ட நாட்கள் படுக்கையிலேயே பெரியம்மா கிடந்ததால் அவர் பெற்ற பிள்ளைகளுக்கும் கூட துக்கத்தின் பாதிப்புகள் பெரிதாக இல்லை. ஆனாலும் பங்காளி என்ற அடிப்பையில் பங்கேற்க வேண்டும் என அண்ணன் வற்புறுத்தினார்..அந்நேரத்திற்கு பணம் தயாரிக்கும் இயந்திரம் நம்மிடம் இல்லாததால் பக்கத்து வீட்டில் கடன் (நாகரிகமாக சொல்வதெனில் பிச்சைதான்)வாங்கி கொண்டு கிளம்பினேன். நான் எதிர்பார்த்தது போல பெரிய ஆர்ப்பாட்டமில்லை .எல்லோருக்குள்ளும் மகிழ்ச்சி குடி கொண்டிருந்தது .வழக்கமான நடைமுறைகள் துவங்கின.வண்ணார் கோவிந்தன் லேசான தள்ளாட்டத்தில் தேருக்கான தயாரிப்புகளை செய்து கொண்டிருந்தார.அவருக்கு அருகே சக்கிலியர் மருதை தென்னையோலை முடிந்து கொண்டிருந்தார்.வாயில் புகையும் பீடியின் வேகத்திற்க்கு ஈடாய் கையும் தென்னை மட்டைகளில் ஓவியம் வரைந்து கொண்டிருந்தன..கொஞ்சம் தள்ளி சிலர் பறை அடித்துக் கொண்டிருந்தனர்.அவர்களுக்கு நடுநயகமாய் இருந்த கொஞ்சம் முதிர்ந்த பெரியவர் உரத்த குரலில் பாட்டு கட்டினார்..அந்த பாடலுக்கு இணையாக துள்ளலாக உடனிருந்த பறையடிக்கும் மனிதர்கள் ஆடிக்கொண்டே அடித்தனர்..ஆச்சர்யம்.. யாரும் கையை ஆட்டி இப்படித்தான் இந்த பாடலுக்கு வரவேண்டுமென்று சொல்ல வில்லை..அவர்களுக்கு ச..ரி .. க .. ம ..தாளத்தை தொடையில் அடித்து கற்றுத்தரும் பள்ளிகளும் இல்லை..ஆனால் ஒவ்வொரு அடியிலும் ஒரு வேதனையும் வலியும் இருந்தது.உற்சாகம் இருந்தது..அந்த இசை சூழலுக்கு ஏற்ப பாடலின் ஏற்ற இறக்கங்களுக்கு தன்னை தானே தகவமைத்துக் கொண்டது..உண்மையில் இப்படி ஒரு இசை ஏன் இறப்பிற்கு மட்டுமே இப்பொழுது கையாளப்படுவது வேதனையாக இருந்தது....இதுதான் போர் முழக்கம்..இதுதானே..உணர்ச்சியை உறுதியாக்குவது..சாவு மேளம் என இதை திட்டமிட்டு யாரோ ஒதுக்கி வைத்ததாக தோன்றியது. பெரியம்மாவின் மகன் வயிற்று பேரன் ஓடி வந்தான்.அந்த சிறுவனுக்கு உண்மையிலேயே பெரும் கவலை.இனி தனக்கு கதை சொல்ல, பேச்சு துணைக்கு பொம்மையை போல முட்டி போட்டு நடப்பதற்கு ,புளியம் பூவை ,கருவெல்லம் போட்டு இடித்து தருவதற்கு,நிலா காலத்தில் முனி நடமாடுவது குறித்து,எந்த சந்தில் கருப்பன் புகைத்து கொண்டு ஊர்காவல் போவான் என இன்னும் அடுக்கில்லா கதைகள் சொல்ல பல்லில்லாத அந்த பொக்கை கிழவி போனதில் அவனுக்கு பெரும் வருத்தம் தான்.எல்லோரின் ஆரம்ப பருவம் கிழவிகளிடம் இருந்தும் கிழவர்களிடம் இருந்தும் தான் துவங்கிறது.அவர்கள் உதிர்த்த வாழ்வியலிலேயே குழந்தைகள் பேச நடக்க முயற்சிக்கின்றன .உலகத்தை அவதானிக்க துவங்குகின்றன. சிறுவன் வந்த வேகத்தில் அங்கே நடுநாயகமாய் பாடிக்கொண்டிருந்த அந்த பெரியவரை அழைத்தான். "யோவ் ..கலியா..எங்கப்பா கூப்ப்ட்டாறு வாயா." இதுவும் கூட,இப்படி கூப்பிட வேண்டும் என்றும் கூட அந்த பொக்கை கிழவியும்,அவளின் இப்பொழுதில்லா கிழவனும் சொல்லி கொடுத்ததாகத்தான் இருக்க வேண்டும். அறுவது வயதை பிணம் எரிந்த நெருப்பில் வறண்ட கைதோலில் போர்த்தியிருந்த அந்த கலியன் கவனிக்காமல் பாடிக்கொண்டிருந்தார்.பாடல் என்றால் சினிமா பாட்டு அல்ல..அது துயரங்கலின்,நாற்றங்களின்,கோவங்களின்,எள்ளாடலின் நீட்சியாய் உள்ளிருந்து வெளிவரும் காட்டாறு. ” கானகத்து கெலுத்திய கண்ணாலயே புடிச்ச தாயி... ரோசமத்த நாட்ட விட்டு ,நலம் தேடி போனாயோ.. ” டண்டடன்..” உறுமும் பேச்சாலே ஊரே மசங்குமடி உள்ள பேச்சாலே என் உயிரே கிரங்குதடி.. ”டண்டடன்” நெல்லறுக்க சோழப்பய உன் குறி கேக்க சொனங்காண்டி ஏ..ஆத்தா..நீயிருந்தா கார்மேகம் கரட்டில் விழும்... “டண்டடன்..டண்டடண்..டண்டக்கு..டண்டக்கு..டண்டடன்..” கலியனின் பாடுக்கு சுற்றுகட்டு பறையும் சேர்ந்து அடித்து பாடும்.கலியனின் பாடலில் இறந்தவரின் அதாவது இறந்து கிடக்கிற பெரியம்மாவின் பராக்கிரமங்களை, அதிசயங்களை,அள்ளி கொடுத்ததை,சின்ன வீட்டுக்குள் வாழ்ந்து இறந்து போன அவளின் நாடாண்ட கதையை பாண்டியனும் ,சோழனும் ஓடி வந்து அரசியல் சூட்சமத்தை இந்த பொக்கை கிழவியிடம் பாக்கு குத்தி கொடுத்து வாங்கி போன கதையை..வனமே பார்க்காத வறண்ட பூமியில் வாழ்ந்தவளை பீச்சாங்கையால் புலியை துரத்தி அடித்ததாக.. என ஒரு பாட்டுக்கட்டியினுடைய கற்பனை வளம், ஒரு சாதாரண விவசாயியை , ஒரு மாபெரும் அரசனுக்கு ஈடாக வர்ணிக்கும்..இவை அத்தனையும் அவரின் மனக்கிடங்கிலிருந்து அவ்வப்பொழுது தானாக தோன்றுபவை..அவற்றை அவர் எழுதி வைத்து மனப்பாடம் செய்து படிக்கிறவர் இல்லை.தானாக வருவது..மீண்டும் ஒரு முறை அதையே பாட சொன்னால் அதை விட சிறப்பாக வேறொன்றுதான் வரும்..அதுவும் முன்னை விட இன்னும் ஆழமும் கருத்தும் பொதிந்ததாய் கொட்டும். கலியன் சில நேரங்களில் தன்னை அடிமை படுத்தி வைத்திருக்கும் உலகை கேள்வி கேட்டு மிக உருக்கமாக பாடுவார்..அவ்வப்பொழுது தனது அடிமைக்கான காரணத்தையும் இறந்து போனவர்களை பார்த்து கேட்பார்..அவரின் பாடலை இறந்து போனவளை தவிர வேறு யாரும் காது கொடுத்து கேட்டதாய் தெரியவில்லை.ஆனாலும் ஒரு கையை காதிலும் மறு கையை வானத்தை நோக்கி நீட்டி, தொலைந்து போன கடவுளை அழைத்தபடி, தாளத்திற்கு ஏற்ப கால்களையும் உடம்பையும் ஆட்டும் இவரின் ஊழிக்கூத்தையும் விவரிக்க இயலாது.தொண்டையில் இறங்கிய OLD MONG கதகதப்பில் குரல் உடைந்து சிதறும் சூட்சமம் இவருக்கே உரித்தானது. சிறுவனுக்கு பாடலின் பொருள் புரியவில்லையோ அல்லது காலையில் இருந்து சாப்பிடாமல் கிடக்கும் கடுப்போ..ஏதோ ஒன்று அவனை எரிச்சலடைய வைத்தது.. "யோவ் ..அடிக்கறத நிறுத்துங்க..கத்திட்டே இருக்கேன் காதுல உளுவள.". வீணை அறுந்தது போல பாட்டும் அடியும் ஒரே நேரத்தில் இறந்து போனது.அதன் மிச்ச சொச்ச அதிர்வுகள் மட்டும் காதில் உயிர் போகும் வேதனையோடு வெளியேறியது. இப்படித்தான் அங்கே சொல்லித்தரப்பட்டிருந்தது.சிறுவன் முதல் பெரியவர் வரை யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம் என்று யாரோ சட்டம் போட்டிருந்தார்கள்.சில நேரம் அடிக்கவும் செய்யலாம் ,கொடும் வசவுகளையும் கொட்டலாம் என சேரிக்கு வெளியே இருப்பவர்களின் கடவுள் நீதி இயற்றி இருந்தார்.அவ்வளவையும் கேட்டுக் கொள்ள வேண்டும் .அடித்தால் வாங்கி கொள்வது மட்டுமே அடிமைக்கு கொடுப்பட்ட பாரிய உரிமையாக இருந்தது.வேண்டுமானால் சத்தமில்லாமல் அழுது கொள்ளலாம்.இன்னொரு உரிமையும் உண்டு. அடிக்கும் பொழுது சிரிக்கலாம்.ஏனோ அந்த உரிமையை இதுவரை யாரும் பயன்படுத்தியதில்லை. "என்ன ..சின்ன முதலியாருக்கு இம்புட்டு கோவம்..காதுல கேக்கல சாமி..." "எங்கப்பா கூப்ட்டாறு..சீக்கிரம் வாங்க..." கலியனும் உடனிருந்த மூவரும் கிளம்பினர்.அண்ணன் அழைபேசியில் யாரிடமோ பேசிக்கொண்டிருந்தான்.தூரத்தில் நின்று எட்டி பார்த்து கொண்டிருந்த சிவன் கோயில் அய்யரை பார்த்ததும் பதட்டமாக ஓடினான்.அய்யர் ஏதோ வருத்தமாக பேச,அவனும் அமைதியாக கேட்டு கொண்டிருந்தான். ” காரியத்திற்கு முன்ன போல அரிசி.வேட்டி மட்டும் பத்தாது..இப்ப இருக்குற விலைவாசில ஒண்ணும் பண்ண முடியாது..வெளியில பெருசா வாங்குறேன்..நீங்க நம்ம ஆளு.. முன்னூரூ கொடுத்தா போதும்..நான் ஊருக்கு போறேன்..ஆத்துல அம்பி இருப்பான் அவனை வச்சி மேனேஜ் பண்ணிக்கங்க...பெருங் கட்ட சொர்க்கம் தான்..வரட்டுமா..?” அண்ணன் அய்யருக்கு நாலடி தள்ளி நின்று கைகளை மடித்து கட்டி பவ்யமாக, தலையை ஆட்டிக் கொண்டிருந்தான்.அவ்வப்பொழுது அழைபேசியை பார்த்துக் கொண்டான்.இறந்த இடத்தில் குதற்க்கம் வேண்டாமென அமைதியாக இருந்தேன்.அய்யர் தனது யமகாவில் கிளம்பினார்.மீண்டும் அழைபேசியை காதுக்கு கொடுத்தான். பதட்டமாக ஓடிவந்த கலியனும் அவருடன் பறைஅடித்தவர்களையும் பார்த்ததும் அண்ணன் அழைபேசியில் பேசியபடி இருந்தான்.கலியன் அவன் பேசிகொண்டு நடக்கும் திசையில் நாலடி நகர்ந்து நடந்தார்.அவன் நின்றால் நின்றார்..நடந்தால் நடந்தார்.அழைபேசியில் பேசி முடித்து நிமிர்ந்த அண்ணன் கலியனை பார்த்து கோபமாக கத்தினான். "டேய் கலியா..நீ தானே குடி வெட்டியான் ..மத்தவன் எல்லாத்தையும் ஏண்டா .. இங்க கூட்டிட்டு வந்த .." கலியன் முதுகு மேலும் கொஞ்சம் கூனியது . அவரை விட இருபது வயது சிறியவனிடம் தலையை சொரிந்து கொள்வதின் மூலமாக தனது விசுவாசத்தை காட்டினார் "சின்னாளுதான் சொன்னாருங்க.." "சரி..சரி..காட்டுக்கு ஆலனுப்பிச்சிட்டியா.. அஞ்சு நிமிசத்துல தண்ணி எடுத்துட்டு வந்துட்டா தூக்கிடலாம்.." "அதெல்லாம் போய் ரொம்ப நேரமாச்சி..ஆத்தாள கட்டையில வச்சா நெல்லா எரியனும்னு செரா கட்டையா எடுத்துட்டு போயிருக்கான்" "யார அனுப்பன" "அம்பெத்காருங்க.." " யாருயா அது..மெட்ராஸ் ஓட்டல்ல இருந்தானே அவனா..அவன் சுத்தப்பட்டு வருவானாயா..?" "எங்க போனாலும் குடி தொழிலு உற்றுமுங்களா.." அப்பொழுது பக்கத்தில் கணேசன் குரல் உயர்த்தி கத்தினார்.(இவரின் தொழில் என்று எதுவுமில்லை..வெட்டி ஆபிசர் ..ஆனா சடங்கு சம்பிரதாயம் அத்துபிடி..எல்லா வீட்டு கல்யாணம்,பொம்பள புள்ள வயசுக்கு வரதுல ஆரம்பிச்சி,காது குத்து ,முத இரவுல என்னன்ன இருக்கனும்,எத்தனை மனிக்கு படுக்கனும்னு எல்லாவற்றிலும் சடங்குகள் சரியாக நடக்கிறதா..தண்ணி கொடத்துல எப்படி பொட்டு வைக்கணும் ,பொம்பளைங்க எப்படி மாரடிக்கணும்,யார் மடில முதல்ல வச்சு காது குத்தனும்.இப்படி ஒரு சமூக சேவை செய்றவர் இவரு இல்லன்னா அந்த ஊருல ஒரு கருமாதியும் நடக்காது) "டேய்..பரப்பயலாம் .பரப்பயலாட்டமாடா நடக்கரிங்க..ஓட்டலு சாப்பாடு சாப்பிட்டு கொழுத்து போய் திரியுரிங்க..பள்ளப்பயளுகள இழுத்து வச்சி அடிச்ச மேரி அடிக்கனும்டா உங்கள.." "சும்மா எகனை மொகனையா பேசாதிங்க..நாங்க அப்புடி ஏன்னா செஞ்சுப்புட்டோம்..தொழிலுல குறை இருந்தா சொல்லுங்க..கவுண்டரே .." "டேய் ..வாய் நீண்டு போச்சுரா..போ..போ..தண்ணி கொடத்துக்கு மோளம் அடிங்கடா.." கலியன் முகம் சுணங்கி போயிற்று.உடனிருந்தவர்களை அழைத்துக் கொண்டு தண்ணி குடம் தூக்கும் கிணற்றடிக்கு கிளம்பினார்..அப்பொழுது ஊருக்கே துணி வெளுத்து தூக்கி சுமந்த கூன் விழுந்த முதுகில் ஒரு மூட்டையை சுமந்தபடி வந்த வண்ணாத்தி கவுண்டரிடம் பேச்சுக் கொடுத்தார்.. " கவுண்டரே..எம் பொண்ணு பாவம்ங்க..அவபுள்ளைக்கு கல்யாணம்ங்க...மூத்த கட்டதானுங்க போயிருச்சி.கொஞ்சம் பாத்து செய்ய சொல்லுங்க..பத்து வேட்டி ஆறு சேலை தொவச்சி கொண்டு வந்துருக்கேன்..ஆயி பாடையில ஏறும் பொழுது குளுகுளுன்னு போவுமுங்க .." "அத காட்டுல வந்து கேளு..இங்க நயி நையிங்காத.." ஆச்சு தண்ணீர் குடம் தூக்கி வந்து விட்டார்கள்.வெடிகள் வெடிக்க, தண்ணீர் குடம் இறங்க ,எல்லோரும் கட்டிப்பிடித்து அழுது ஓய,நாவிதர் சீயாக்காயையும் எண்ணையையும் வைத்து கொண்டு சொந்தங்களை அழைத்து என்னை வைத்து விட சொல்ல,.எல்லோரும் புறங்கையின் மூன்று விரல்களால் எண்ணையையும் சீயாக்காயையும் பெரியம்மா தலையில் தேய்க்க ,நாவிதர் "அருணாச்சல சிதம்பரம்.. அருணாச்சல சிதம்பரம்" என ஒவ்வொருவருக்கும் சொல்லி முடிக்க எல்லோரும் அரப்பு தண்ணீர் வைத்து முடிந்ததும் நாவிதர் வெளியேற ,பெரியம்மாவை பெண்கள் குளுப்பாட்டி சேலை அணிவித்தனர் .அதன் பிறகு மீண்டும் சடங்கு துவங்கியது.வாய்க்கரிசி போட்டு பாடையில் ஏற்றுகிறார்கள்..கலியன் ஓங்கிய குரலால் ஊருக்கே செய்தி சொல்லி பாட்டு படிக்க, மற்றவர்கள் பறையடிக்க, ,இழுத்துக்கொண்டிருந்த பொழுது சலிப்பேற்றி,எல்லோருக்கும் சில நேரங்களில் எப்ப சாகுமோ என எரிச்சளுட்டியவள் ஒய்யாரமாக ஊரை கடந்து வெடிச்சத்தம் வான் பிளக்க தேரில் போகிறாள்.அந்த தேருக்கு முன்பாக வண்ணாத்தி தான் கொண்டு வந்திருந்த துவைத்த சேலைகளையும்,வேட்டியையும் அந்த மண்ணில் விரிக்க ,உறவுகள் தேருக்கு விழுந்து கும்பிட கொண்டாட்டமாக கிளம்புகிறது தேர். பாடை மாற்றி என குறிக்கப்படும் ஒரு இடத்தின் அருகே பிணம் வர,அங்கே பிணத்தை மாற்றுவதற்காக மலக்களிவுகளால் நிரம்பியிருந்த அந்த சாலையில் தனது காலால் மலத்தை தள்ளி விட்டு குறியிடுகிறார் கலியன்..பின் பாடியபடி முன்னேற,பிணமும் குறியிட்ட இடத்தில் தலை பகுதி எதிர் புறமும் ,கால் பகுதி மறுபுறமும் திரும்ப..பிணம் சுடுகாடை வந்தடைகிறது..அதன் பிறகும் ஒரு மணிநேர சடங்கு நாவிதர் பானைக்கு முக்கண் உடைத்து மூன்று வளம் வர செய்து பானை உடைக்கிறார்.அதற்குள்ளேயே வந்திருந்த பலர் குளிப்பதற்காக சுடுகாடை சுற்றி இருக்கும் கிணறுகளை தேட துவங்கி விட்டனர்.மீதமிருந்த சிலரும் பிணத்திற்கு தீ மூட்டி கிளம்புகின்றனர்..பிணம் எரிய துவங்க..அங்கே அம்பேத்கார் பிணத்தை எரித்துக் கொண்டிருக்க,உடன் ஒரு ஆளை விட்டு விட்டு கலியன் தனது மற்ற ஆட்களுடன் புளிய மரத்தடிக்கு வந்து காத்திருக்கின்றனர் . வண்ணாத்தி தான் கொண்டு வந்த வெள்ளை வேட்டிகளை காலம் காலமாய் எல்லாவற்றின் சாட்சியாய் நிற்கும் அந்த புளிய மரத்தினடியில் போட ,இறந்தவர்களின் சொந்தங்களும்,ஊர் பஞ்சாயத்து பேசும் பெருசுகளும் நடுநாயகமாய் அமர,சடங்கை காப்பாற்றும் கவுண்டனும் ,யாருக்கு எவ்வளவு என எண்ணிகொடுக்க ரெட்டியும், மேலும் சில பெருஞ்சாதி ஆட்களும் அமர்ந்திருக்கின்றனர்..அவர்களின் எதிரே குடி வெட்டியான் எனப்படும் கலியனும் அவரின் பின்னே பறையடித்து வந்த மற்றவர்களும் நிற்கின்றனர்..அவர்களுக்கு சற்று தள்ளி வன்னாத்தியம்மா ஓரமாக நிற்கிறார்..நாவிதர் அந்த அம்மாவுடன் சேர்ந்து நிற்க,இவர்களுடன் நிற்காமல் சற்று தள்ளி குடி சக்கிலி எனப்படும் மருதை நிற்கிறார்..நெஞ்சை நிமிர்த்தி பறையடித்து வந்த பறையர்கள் முதற் கொண்டு மற்ற எல்லோருமே அந்த சுடுகாட்டு பஞ்சாயத்தின் முன்பு கூன் விழுந்த நிலையில் தங்களது துண்டை இடுப்பில் கட்டியிருக்கிறார்கள்..எல்லோரும் அமர்ந்து முடித்ததும் பஞ்சாயத்தாரின் எதிரில் இருந்த அனைவரும் இடுப்பில் துண்டை கட்டி நெடுஞ்சான் கிடையாக விழுந்து கும்பிட வேண்டும் இது மரபு(?) அப்பொழுது எதேச்சையாக பஞ்சாயத்திற்கு எதிரிலிருக்கும் மக்களுடன் நின்றிருந்த என்னை நோக்கி கோபமான குரல் ஒன்று பஞ்சாயத்து பக்கமிருந்து வர , அதனை ஒட்டி பல குரல்கள்.. .. "டேய் மூர்த்தி..நீ என்னடா பறப்பய பக்கத்துல போய் நிக்கிற..பேசாம அவன் வீட்ல பொண்ணு கட்டிக்கிட்டு பறையடிடா.." "அந்த மூதி மெட்ராஸ் போனதுல இருந்து பெரியார் கிழவன் சொன்னான்னு ஏதோ புஸ்தகம் படிச்சிட்டு வந்து அவனும் இவனும் சமம்னு உளறுது.." "டேய்..அதா சொல்றம்லடா..இந்தாண்ட வா.." கோபம் தலைக்கேறியது.அவ்வளவு பேரின் எதிரில் திட்டிய திட்டுகள் பதட்டத்தை ஏற்படுத்தின. ” யேன்..நின்னா என்ன நடக்கும்...” எல்லோரும் கொள்ளென சிரித்தார்கள்... ”டேய்...அப்படித்தான்..அந்த சைக்கிள் கடை தாடிக்கார முனுசாமி கிழவன் வீராப்பா இருந்தான்..போன வாரம் இங்கதான் பொதைச்சோம்..” கடைசிவரை கருப்பு சட்டையுடன் கோயில் எதிரே பெரியார் மிதி வண்டி கடை வைத்து,சமூக மறுப்போடு வாழ்ந்து மறைந்த முத்துசாமிதான் எனக்கும் பெரியாரை சொல்லி கொடுத்தவர்.அவரையும் கிண்டலடிக்கும் இவர்களிடம் என்ன பேசுவதென தெரியாத ஒரு பதட்டம். அந்த கணத்தில் கொஞ்ச நஞ்ச வீரமும் போய்விட்டது ..போவதா வேண்டாமா என்கிற தடுமாற்றத்தில் நின்று கொண்டிருந்தேன்..எனது சொந்தங்கள் கத்தலில் தேக்கி வைத்திருந்த அறிவு மழுங்க,இதுநாள் வரை பேசிய முற்போக்கு முடங்க, எதிர் திசை வந்து விட்டேன்.. மொத்தமாக கடையில் ஒரு ரூபாய்,இரண்டு ரூபாய் ,ஐந்து ரூபாய் என மாற்றி எடுத்து வரப்பட்ட காசுகள் பாலித்தீன் பையை மீறி பிதுங்கி வழிகின்றன..அதிலிருந்து ரெட்டி சில ஐந்து ரூபாய் காசுகளையும் கொஞ்சம் பணத்தையும் எடுக்கிறார்..பணத்தை வாங்கி சரி பார்க்கும் கவுண்டன் அதை தானும் எண்ணியபடியே.. "கலியா உன் ஆளு..எத்தனடா.." "ஆறுங்க." "என்னடா..என்கிட்டே..பொய்யா.." "கவுண்டரே..இங்க நாளுங்க..பொணம் எரிக்கிற இடத்துல ரெண்டுங்க.." "டேய்..அந்த ஓட்டல் வேலை செஞ்சவன்லாம் ஒரு கணக்காடா..இந்தா..?" பணத்தை குனிந்து வாங்கிய கலியன் எண்ணிபார்த்து விட்டு பதறி..அவர்கள் முன்பு நெடுஞ்சான் கிடையாக மண்ணில் விழுந்து கும்பிட்டார். "கவுண்டரே..கட்டாதுங்க நான் குடிங்க ..இவங்க எல்லாம் வெளி ஆளு..எல்லாருக்கும் கொடுக்கணும் " பேசியபடி எழுந்த கலியன் மற்றவர்களிடம் கண் காட்ட, அவருடன் மற்ற பறையடித்தவர்களும் நெடுஞ்சான் கிடையாக விழுந்து சபையை கும்பிட்டனர். கவுண்டர் முகத்தை கோபமாக வைப்பது போல வைத்துக் கொண்டு கொஞ்சம் மேலும் சில்லறைகள் கொஞ்சம் தூக்கி எதிரில் போட்டார் . "அவ்ளதான்..இந்தா ..?" அந்த சில்லறைகளை எடுத்த கலியன் எண்ணிபார்த்து விட்டு மீண்டும் "கட்டாதுங்க .."என நெடுஞ்சாண்கிடையாக மீண்டும் விழ,மீண்டும் அதே போல கொஞ்சம் சில்லறைகளை தூக்கி கோபமாக எறிந்தார் ரெட்டி. " கலியா சும்மா சும்மா கால்ல விழுந்து காரியம் சாதிக்காதடா..முதலியார்கிட்ட கொட்டியா கிடக்குது.." " எங்களுக்கு கட்டிபடியாகனுங்களே சாமி..ஆறு சீவன் வந்துருக்குதுங்க..ஒடம்பு வலிக்கு சாராயம் குடிக்க கூட காணலைங்க..இல்லன்னா நான் தான் என் கைகாச போட்டு கொடுக்கணும் பாத்து குடுங்க கவுண்டரே.." "உன் முதளிதானேடா..அந்த ஆயிக்கு உன் கடன் செஞ்சதா இருக்கட்டும் போடா.." இப்படியாக விழுந்து கும்பிட கும்பிட ,கொஞ்சம் எக்காலமும், விளையாட்டுமாக அந்த சபை தூக்கி எறிந்த சில்லறைகள், செருப்பில்லாமல் வெந்தனலில் கால் ஆடி,தசையாடி,கைகள் அதிர,உழைத்தவர்களின் அன்றைய தேவைக்கு கூட போதுமானதாக இல்லை.எல்லோர் முகங்களிலும் கவலை அப்பியிருக்க ,இதற்கு மேலும் எப்படி கேட்பது என புரியாமல் தவித்து நிற்கின்றனர். "கலியா ..இதுக்கு மேலயும் கால்ல விழுந்த நான் எந்திரிச்சி போய்டுவேன்.." கவுண்டன் இறுதியாக சொன்னதும் சபையில் இருந்த அனைவரும் ’கொல்’லென்று சிரிக்கின்றனர். என்ன செய்வதென தெரியாமல் தயங்கி தயங்கி கலியன் கீழே விழுந்த கொஞ்சம் சில்லரையும் பொருக்கி கொள்கிறார.அடுத்து வன்னாத்தியம்மாவுக்கும் அதே நிலைமைதான்..குடி சக்கிலிக்கும் அதே நிலைமைதான்..இதில் ஒரே ஒரு வித்தியாசம்..குடி சக்கிலியருக்கு மட்டும் கீழே போடும் காசுகளை எடுக்க உரிமையில்லை..அந்த உரிமை குடி பறையருக்கு தான் உண்டு..அவர் எடுத்து குடி சக்கிலியருக்கு போடுவார்.இதில் ஒரே ஒருவர் மட்டும் பணம் முன்னேமே பேசி வருவார்..அவர் யார் காலிலும் விழுவதில்லை..சின்னதாக முதுகை வளைத்துக் கொடுத்து வாங்கி கொள்வதோடு சரி..அந்த சிறப்பு உரிமையை பெற்றவர்..நாவிதர்.. எல்லாம் முடிந்து சபையினர் களைந்து விட்டனர்.வன்னாத்தியம்மா..கடைசியாக அவள் விரித்திருந்த வேட்டியில் விழுந்திருந்த சில சில்லறைகளை பொறுக்கிக் கொண்டு வேட்டியை எடுத்துக் கொண்டு கிளம்பி போக,மற்றவர்களும் கிளம்ப, கலியனுடன் வந்தவர்களுக்கு தன்னிடமிருந்த அனைத்து காசுகளையும் கொடுத்து அனுப்பி விட்டு, பிணம் எறியும் திசையையே பார்த்தபடி காதில் இருந்த ஒரு பீடியை பற்ற வைக்கிறார். அம்பேத்காரும் அவனுடனிருந்த ஒரு ஆளும் எறியும் சிதையில் பிணத்தை மூட்டு குச்சியால் தூக்கி நிறுத்தி அடிக்க துவங்குகிறார்கள்.பிணத்தின் ஊனிலிருந்து சில கொழுப்புகள் தெறித்து பற்றியெறியும் தீ நாக்கில் விழுந்து அப்படியே கருகியது.தூரத்திலிருந்து கலியனின் பாடல் காற்றையும் கிழித்து வீசியபடி பிணத்தை நோக்கி வருகிறது. குறிப்பு : காக்கை சிறகினிலே இதழில் வந்த கதை

எங்களுக்கென‬ நதி இருந்தது ...

எங்களுக்கென‬ நதி இருந்தது .... யாராலும் பெயர் சூட்டப்படாத பறவைகள் எங்களின் வனம் முழுதும் குதூகளித்து கிடந்தன,. பூமியின் பாரிய பரப்புகளை அதிர்வித்து மகிழ காட்டாறுகள் எங்கள் வசமிருந்தன.. அவ்வப்போது எம் குழந்தைகளை மகிழ்விக்க எங்களின் மூத்தி நீலி இருந்தாள்.. நாங்கள் மற்ற உயிரினங்களை போல உணவு சேகரிக்க வயல் வெளிகளை படைத்திருந்தோம் .. எங்களின் காதலை முன் மொழிய ஆவாரம் பூக்களை எம் பெண்களுக்கு சூட்டி மகிழ்ந்த நினைவுகள் இப்பொழுதும் மிச்சமிருக்கின்றன.. இப்பொழுது நினைவுகள் மட்டுமே மிச்சமிருக்கின்றன... வேட்டையாடிய .. உழைத்து சேகரித்த உணவை ஒன்றாய் சமமாய் முதலில் குழந்தைகளுக்கும், உடல்பிறழ்தவருக்கும், முதியவர்களுக்கும் கொடுத்து பின் நாங்கள் பசியாறிய பொழுதுகளை ஆரிய படையெடுப்பில் பலிகொடுத்தோம்... சாதியாக எங்களை நாங்களே பிரித்து கொள்ள பணிக்க பட்டோம் .. முதலில் இங்கிருந்தே நாங்கள் வேறானோம் .. பின் நிலம் .. பின் வனம்.... பின் எங்களை... மனிதர்களாய் பழக்கப்படுத்திய எங்களின் மொழி .. எங்களின் பாடல் .. எல்லாம் வருபவனிடம் கொடுத்து கொடுத்து கட்டுண்டோம் .. எல்லாம் முடிந்ததது ... எமக்காக கரும் புலியாக காட்சியளித்த தலைவனும் இல்லை .. ஒன்றே ஒன்றை மட்டும் மிச்சம் வைத்திருக்கிறோம்.. அது அடிமை ..

ஞாயிறு, 30 செப்டம்பர், 2012

என்றாவது பொழியும் மழை

நெடுநேரம் 
தூங்க எத்தனிக்கும் 
உன் இதயத்தை இறுக பிடித்திருந்தேன் 
மழை வரும் நனைய விடலாமென..
நேரம் கடந்து நாட்களாகி 
இருண்மை அடர்ந்து வருடங்களின் 
புற தோற்றங்களை முதுகில் சுமந்த படி 
காத்திருந்தேன் 
காத்திருந்தேன் 
காத்திருந்தேன் 
ஒரு நாள் மணலை குடைந்து 
கடலலைகளை உடலாக முறுக்கியபடி...
உன் மேகத்திரலை கெக்களித்தபடி 
உலகின் வண்ணங்களை ஒளித்துக் கொண்டு    
கம்பீரமாக நின்றது வானவில் 
இறுக்கி பிடித்திருந்த 
கை நரம்புகள் புடைத்து வெடித்திட 
என்னை விட்டகன்றாய் ..
என்றாவது ஒரு நாள் நீ 
பிடித்திருக்கும் வானவில்லை 
என் மழை மூழ்கடிக்கும் 
அப்பொழுது நீயும் இங்கிருக்க மாட்டாய் ..
நானும் மழையை மறந்திருப்பேன்........... 

பெருங்கனவு தேசம்!

http://en.vikatan.com/