வெள்ளி, 15 மே, 2015

காற்றை கிழித்த பாட்டு - சிறுகதை


காற்றை கிழித்த பாட்டு - கீரா 80 வயசு பெரியம்மா இறந்து விட்டார் . செய்தி இரவு பதினோரு மணிக்கு வந்தது.. நீண்ட நாட்கள் படுக்கையிலேயே பெரியம்மா கிடந்ததால் அவர் பெற்ற பிள்ளைகளுக்கும் கூட துக்கத்தின் பாதிப்புகள் பெரிதாக இல்லை. ஆனாலும் பங்காளி என்ற அடிப்பையில் பங்கேற்க வேண்டும் என அண்ணன் வற்புறுத்தினார்..அந்நேரத்திற்கு பணம் தயாரிக்கும் இயந்திரம் நம்மிடம் இல்லாததால் பக்கத்து வீட்டில் கடன் (நாகரிகமாக சொல்வதெனில் பிச்சைதான்)வாங்கி கொண்டு கிளம்பினேன். நான் எதிர்பார்த்தது போல பெரிய ஆர்ப்பாட்டமில்லை .எல்லோருக்குள்ளும் மகிழ்ச்சி குடி கொண்டிருந்தது .வழக்கமான நடைமுறைகள் துவங்கின.வண்ணார் கோவிந்தன் லேசான தள்ளாட்டத்தில் தேருக்கான தயாரிப்புகளை செய்து கொண்டிருந்தார.அவருக்கு அருகே சக்கிலியர் மருதை தென்னையோலை முடிந்து கொண்டிருந்தார்.வாயில் புகையும் பீடியின் வேகத்திற்க்கு ஈடாய் கையும் தென்னை மட்டைகளில் ஓவியம் வரைந்து கொண்டிருந்தன..கொஞ்சம் தள்ளி சிலர் பறை அடித்துக் கொண்டிருந்தனர்.அவர்களுக்கு நடுநயகமாய் இருந்த கொஞ்சம் முதிர்ந்த பெரியவர் உரத்த குரலில் பாட்டு கட்டினார்..அந்த பாடலுக்கு இணையாக துள்ளலாக உடனிருந்த பறையடிக்கும் மனிதர்கள் ஆடிக்கொண்டே அடித்தனர்..ஆச்சர்யம்.. யாரும் கையை ஆட்டி இப்படித்தான் இந்த பாடலுக்கு வரவேண்டுமென்று சொல்ல வில்லை..அவர்களுக்கு ச..ரி .. க .. ம ..தாளத்தை தொடையில் அடித்து கற்றுத்தரும் பள்ளிகளும் இல்லை..ஆனால் ஒவ்வொரு அடியிலும் ஒரு வேதனையும் வலியும் இருந்தது.உற்சாகம் இருந்தது..அந்த இசை சூழலுக்கு ஏற்ப பாடலின் ஏற்ற இறக்கங்களுக்கு தன்னை தானே தகவமைத்துக் கொண்டது..உண்மையில் இப்படி ஒரு இசை ஏன் இறப்பிற்கு மட்டுமே இப்பொழுது கையாளப்படுவது வேதனையாக இருந்தது....இதுதான் போர் முழக்கம்..இதுதானே..உணர்ச்சியை உறுதியாக்குவது..சாவு மேளம் என இதை திட்டமிட்டு யாரோ ஒதுக்கி வைத்ததாக தோன்றியது. பெரியம்மாவின் மகன் வயிற்று பேரன் ஓடி வந்தான்.அந்த சிறுவனுக்கு உண்மையிலேயே பெரும் கவலை.இனி தனக்கு கதை சொல்ல, பேச்சு துணைக்கு பொம்மையை போல முட்டி போட்டு நடப்பதற்கு ,புளியம் பூவை ,கருவெல்லம் போட்டு இடித்து தருவதற்கு,நிலா காலத்தில் முனி நடமாடுவது குறித்து,எந்த சந்தில் கருப்பன் புகைத்து கொண்டு ஊர்காவல் போவான் என இன்னும் அடுக்கில்லா கதைகள் சொல்ல பல்லில்லாத அந்த பொக்கை கிழவி போனதில் அவனுக்கு பெரும் வருத்தம் தான்.எல்லோரின் ஆரம்ப பருவம் கிழவிகளிடம் இருந்தும் கிழவர்களிடம் இருந்தும் தான் துவங்கிறது.அவர்கள் உதிர்த்த வாழ்வியலிலேயே குழந்தைகள் பேச நடக்க முயற்சிக்கின்றன .உலகத்தை அவதானிக்க துவங்குகின்றன. சிறுவன் வந்த வேகத்தில் அங்கே நடுநாயகமாய் பாடிக்கொண்டிருந்த அந்த பெரியவரை அழைத்தான். "யோவ் ..கலியா..எங்கப்பா கூப்ப்ட்டாறு வாயா." இதுவும் கூட,இப்படி கூப்பிட வேண்டும் என்றும் கூட அந்த பொக்கை கிழவியும்,அவளின் இப்பொழுதில்லா கிழவனும் சொல்லி கொடுத்ததாகத்தான் இருக்க வேண்டும். அறுவது வயதை பிணம் எரிந்த நெருப்பில் வறண்ட கைதோலில் போர்த்தியிருந்த அந்த கலியன் கவனிக்காமல் பாடிக்கொண்டிருந்தார்.பாடல் என்றால் சினிமா பாட்டு அல்ல..அது துயரங்கலின்,நாற்றங்களின்,கோவங்களின்,எள்ளாடலின் நீட்சியாய் உள்ளிருந்து வெளிவரும் காட்டாறு. ” கானகத்து கெலுத்திய கண்ணாலயே புடிச்ச தாயி... ரோசமத்த நாட்ட விட்டு ,நலம் தேடி போனாயோ.. ” டண்டடன்..” உறுமும் பேச்சாலே ஊரே மசங்குமடி உள்ள பேச்சாலே என் உயிரே கிரங்குதடி.. ”டண்டடன்” நெல்லறுக்க சோழப்பய உன் குறி கேக்க சொனங்காண்டி ஏ..ஆத்தா..நீயிருந்தா கார்மேகம் கரட்டில் விழும்... “டண்டடன்..டண்டடண்..டண்டக்கு..டண்டக்கு..டண்டடன்..” கலியனின் பாடுக்கு சுற்றுகட்டு பறையும் சேர்ந்து அடித்து பாடும்.கலியனின் பாடலில் இறந்தவரின் அதாவது இறந்து கிடக்கிற பெரியம்மாவின் பராக்கிரமங்களை, அதிசயங்களை,அள்ளி கொடுத்ததை,சின்ன வீட்டுக்குள் வாழ்ந்து இறந்து போன அவளின் நாடாண்ட கதையை பாண்டியனும் ,சோழனும் ஓடி வந்து அரசியல் சூட்சமத்தை இந்த பொக்கை கிழவியிடம் பாக்கு குத்தி கொடுத்து வாங்கி போன கதையை..வனமே பார்க்காத வறண்ட பூமியில் வாழ்ந்தவளை பீச்சாங்கையால் புலியை துரத்தி அடித்ததாக.. என ஒரு பாட்டுக்கட்டியினுடைய கற்பனை வளம், ஒரு சாதாரண விவசாயியை , ஒரு மாபெரும் அரசனுக்கு ஈடாக வர்ணிக்கும்..இவை அத்தனையும் அவரின் மனக்கிடங்கிலிருந்து அவ்வப்பொழுது தானாக தோன்றுபவை..அவற்றை அவர் எழுதி வைத்து மனப்பாடம் செய்து படிக்கிறவர் இல்லை.தானாக வருவது..மீண்டும் ஒரு முறை அதையே பாட சொன்னால் அதை விட சிறப்பாக வேறொன்றுதான் வரும்..அதுவும் முன்னை விட இன்னும் ஆழமும் கருத்தும் பொதிந்ததாய் கொட்டும். கலியன் சில நேரங்களில் தன்னை அடிமை படுத்தி வைத்திருக்கும் உலகை கேள்வி கேட்டு மிக உருக்கமாக பாடுவார்..அவ்வப்பொழுது தனது அடிமைக்கான காரணத்தையும் இறந்து போனவர்களை பார்த்து கேட்பார்..அவரின் பாடலை இறந்து போனவளை தவிர வேறு யாரும் காது கொடுத்து கேட்டதாய் தெரியவில்லை.ஆனாலும் ஒரு கையை காதிலும் மறு கையை வானத்தை நோக்கி நீட்டி, தொலைந்து போன கடவுளை அழைத்தபடி, தாளத்திற்கு ஏற்ப கால்களையும் உடம்பையும் ஆட்டும் இவரின் ஊழிக்கூத்தையும் விவரிக்க இயலாது.தொண்டையில் இறங்கிய OLD MONG கதகதப்பில் குரல் உடைந்து சிதறும் சூட்சமம் இவருக்கே உரித்தானது. சிறுவனுக்கு பாடலின் பொருள் புரியவில்லையோ அல்லது காலையில் இருந்து சாப்பிடாமல் கிடக்கும் கடுப்போ..ஏதோ ஒன்று அவனை எரிச்சலடைய வைத்தது.. "யோவ் ..அடிக்கறத நிறுத்துங்க..கத்திட்டே இருக்கேன் காதுல உளுவள.". வீணை அறுந்தது போல பாட்டும் அடியும் ஒரே நேரத்தில் இறந்து போனது.அதன் மிச்ச சொச்ச அதிர்வுகள் மட்டும் காதில் உயிர் போகும் வேதனையோடு வெளியேறியது. இப்படித்தான் அங்கே சொல்லித்தரப்பட்டிருந்தது.சிறுவன் முதல் பெரியவர் வரை யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம் என்று யாரோ சட்டம் போட்டிருந்தார்கள்.சில நேரம் அடிக்கவும் செய்யலாம் ,கொடும் வசவுகளையும் கொட்டலாம் என சேரிக்கு வெளியே இருப்பவர்களின் கடவுள் நீதி இயற்றி இருந்தார்.அவ்வளவையும் கேட்டுக் கொள்ள வேண்டும் .அடித்தால் வாங்கி கொள்வது மட்டுமே அடிமைக்கு கொடுப்பட்ட பாரிய உரிமையாக இருந்தது.வேண்டுமானால் சத்தமில்லாமல் அழுது கொள்ளலாம்.இன்னொரு உரிமையும் உண்டு. அடிக்கும் பொழுது சிரிக்கலாம்.ஏனோ அந்த உரிமையை இதுவரை யாரும் பயன்படுத்தியதில்லை. "என்ன ..சின்ன முதலியாருக்கு இம்புட்டு கோவம்..காதுல கேக்கல சாமி..." "எங்கப்பா கூப்ட்டாறு..சீக்கிரம் வாங்க..." கலியனும் உடனிருந்த மூவரும் கிளம்பினர்.அண்ணன் அழைபேசியில் யாரிடமோ பேசிக்கொண்டிருந்தான்.தூரத்தில் நின்று எட்டி பார்த்து கொண்டிருந்த சிவன் கோயில் அய்யரை பார்த்ததும் பதட்டமாக ஓடினான்.அய்யர் ஏதோ வருத்தமாக பேச,அவனும் அமைதியாக கேட்டு கொண்டிருந்தான். ” காரியத்திற்கு முன்ன போல அரிசி.வேட்டி மட்டும் பத்தாது..இப்ப இருக்குற விலைவாசில ஒண்ணும் பண்ண முடியாது..வெளியில பெருசா வாங்குறேன்..நீங்க நம்ம ஆளு.. முன்னூரூ கொடுத்தா போதும்..நான் ஊருக்கு போறேன்..ஆத்துல அம்பி இருப்பான் அவனை வச்சி மேனேஜ் பண்ணிக்கங்க...பெருங் கட்ட சொர்க்கம் தான்..வரட்டுமா..?” அண்ணன் அய்யருக்கு நாலடி தள்ளி நின்று கைகளை மடித்து கட்டி பவ்யமாக, தலையை ஆட்டிக் கொண்டிருந்தான்.அவ்வப்பொழுது அழைபேசியை பார்த்துக் கொண்டான்.இறந்த இடத்தில் குதற்க்கம் வேண்டாமென அமைதியாக இருந்தேன்.அய்யர் தனது யமகாவில் கிளம்பினார்.மீண்டும் அழைபேசியை காதுக்கு கொடுத்தான். பதட்டமாக ஓடிவந்த கலியனும் அவருடன் பறைஅடித்தவர்களையும் பார்த்ததும் அண்ணன் அழைபேசியில் பேசியபடி இருந்தான்.கலியன் அவன் பேசிகொண்டு நடக்கும் திசையில் நாலடி நகர்ந்து நடந்தார்.அவன் நின்றால் நின்றார்..நடந்தால் நடந்தார்.அழைபேசியில் பேசி முடித்து நிமிர்ந்த அண்ணன் கலியனை பார்த்து கோபமாக கத்தினான். "டேய் கலியா..நீ தானே குடி வெட்டியான் ..மத்தவன் எல்லாத்தையும் ஏண்டா .. இங்க கூட்டிட்டு வந்த .." கலியன் முதுகு மேலும் கொஞ்சம் கூனியது . அவரை விட இருபது வயது சிறியவனிடம் தலையை சொரிந்து கொள்வதின் மூலமாக தனது விசுவாசத்தை காட்டினார் "சின்னாளுதான் சொன்னாருங்க.." "சரி..சரி..காட்டுக்கு ஆலனுப்பிச்சிட்டியா.. அஞ்சு நிமிசத்துல தண்ணி எடுத்துட்டு வந்துட்டா தூக்கிடலாம்.." "அதெல்லாம் போய் ரொம்ப நேரமாச்சி..ஆத்தாள கட்டையில வச்சா நெல்லா எரியனும்னு செரா கட்டையா எடுத்துட்டு போயிருக்கான்" "யார அனுப்பன" "அம்பெத்காருங்க.." " யாருயா அது..மெட்ராஸ் ஓட்டல்ல இருந்தானே அவனா..அவன் சுத்தப்பட்டு வருவானாயா..?" "எங்க போனாலும் குடி தொழிலு உற்றுமுங்களா.." அப்பொழுது பக்கத்தில் கணேசன் குரல் உயர்த்தி கத்தினார்.(இவரின் தொழில் என்று எதுவுமில்லை..வெட்டி ஆபிசர் ..ஆனா சடங்கு சம்பிரதாயம் அத்துபிடி..எல்லா வீட்டு கல்யாணம்,பொம்பள புள்ள வயசுக்கு வரதுல ஆரம்பிச்சி,காது குத்து ,முத இரவுல என்னன்ன இருக்கனும்,எத்தனை மனிக்கு படுக்கனும்னு எல்லாவற்றிலும் சடங்குகள் சரியாக நடக்கிறதா..தண்ணி கொடத்துல எப்படி பொட்டு வைக்கணும் ,பொம்பளைங்க எப்படி மாரடிக்கணும்,யார் மடில முதல்ல வச்சு காது குத்தனும்.இப்படி ஒரு சமூக சேவை செய்றவர் இவரு இல்லன்னா அந்த ஊருல ஒரு கருமாதியும் நடக்காது) "டேய்..பரப்பயலாம் .பரப்பயலாட்டமாடா நடக்கரிங்க..ஓட்டலு சாப்பாடு சாப்பிட்டு கொழுத்து போய் திரியுரிங்க..பள்ளப்பயளுகள இழுத்து வச்சி அடிச்ச மேரி அடிக்கனும்டா உங்கள.." "சும்மா எகனை மொகனையா பேசாதிங்க..நாங்க அப்புடி ஏன்னா செஞ்சுப்புட்டோம்..தொழிலுல குறை இருந்தா சொல்லுங்க..கவுண்டரே .." "டேய் ..வாய் நீண்டு போச்சுரா..போ..போ..தண்ணி கொடத்துக்கு மோளம் அடிங்கடா.." கலியன் முகம் சுணங்கி போயிற்று.உடனிருந்தவர்களை அழைத்துக் கொண்டு தண்ணி குடம் தூக்கும் கிணற்றடிக்கு கிளம்பினார்..அப்பொழுது ஊருக்கே துணி வெளுத்து தூக்கி சுமந்த கூன் விழுந்த முதுகில் ஒரு மூட்டையை சுமந்தபடி வந்த வண்ணாத்தி கவுண்டரிடம் பேச்சுக் கொடுத்தார்.. " கவுண்டரே..எம் பொண்ணு பாவம்ங்க..அவபுள்ளைக்கு கல்யாணம்ங்க...மூத்த கட்டதானுங்க போயிருச்சி.கொஞ்சம் பாத்து செய்ய சொல்லுங்க..பத்து வேட்டி ஆறு சேலை தொவச்சி கொண்டு வந்துருக்கேன்..ஆயி பாடையில ஏறும் பொழுது குளுகுளுன்னு போவுமுங்க .." "அத காட்டுல வந்து கேளு..இங்க நயி நையிங்காத.." ஆச்சு தண்ணீர் குடம் தூக்கி வந்து விட்டார்கள்.வெடிகள் வெடிக்க, தண்ணீர் குடம் இறங்க ,எல்லோரும் கட்டிப்பிடித்து அழுது ஓய,நாவிதர் சீயாக்காயையும் எண்ணையையும் வைத்து கொண்டு சொந்தங்களை அழைத்து என்னை வைத்து விட சொல்ல,.எல்லோரும் புறங்கையின் மூன்று விரல்களால் எண்ணையையும் சீயாக்காயையும் பெரியம்மா தலையில் தேய்க்க ,நாவிதர் "அருணாச்சல சிதம்பரம்.. அருணாச்சல சிதம்பரம்" என ஒவ்வொருவருக்கும் சொல்லி முடிக்க எல்லோரும் அரப்பு தண்ணீர் வைத்து முடிந்ததும் நாவிதர் வெளியேற ,பெரியம்மாவை பெண்கள் குளுப்பாட்டி சேலை அணிவித்தனர் .அதன் பிறகு மீண்டும் சடங்கு துவங்கியது.வாய்க்கரிசி போட்டு பாடையில் ஏற்றுகிறார்கள்..கலியன் ஓங்கிய குரலால் ஊருக்கே செய்தி சொல்லி பாட்டு படிக்க, மற்றவர்கள் பறையடிக்க, ,இழுத்துக்கொண்டிருந்த பொழுது சலிப்பேற்றி,எல்லோருக்கும் சில நேரங்களில் எப்ப சாகுமோ என எரிச்சளுட்டியவள் ஒய்யாரமாக ஊரை கடந்து வெடிச்சத்தம் வான் பிளக்க தேரில் போகிறாள்.அந்த தேருக்கு முன்பாக வண்ணாத்தி தான் கொண்டு வந்திருந்த துவைத்த சேலைகளையும்,வேட்டியையும் அந்த மண்ணில் விரிக்க ,உறவுகள் தேருக்கு விழுந்து கும்பிட கொண்டாட்டமாக கிளம்புகிறது தேர். பாடை மாற்றி என குறிக்கப்படும் ஒரு இடத்தின் அருகே பிணம் வர,அங்கே பிணத்தை மாற்றுவதற்காக மலக்களிவுகளால் நிரம்பியிருந்த அந்த சாலையில் தனது காலால் மலத்தை தள்ளி விட்டு குறியிடுகிறார் கலியன்..பின் பாடியபடி முன்னேற,பிணமும் குறியிட்ட இடத்தில் தலை பகுதி எதிர் புறமும் ,கால் பகுதி மறுபுறமும் திரும்ப..பிணம் சுடுகாடை வந்தடைகிறது..அதன் பிறகும் ஒரு மணிநேர சடங்கு நாவிதர் பானைக்கு முக்கண் உடைத்து மூன்று வளம் வர செய்து பானை உடைக்கிறார்.அதற்குள்ளேயே வந்திருந்த பலர் குளிப்பதற்காக சுடுகாடை சுற்றி இருக்கும் கிணறுகளை தேட துவங்கி விட்டனர்.மீதமிருந்த சிலரும் பிணத்திற்கு தீ மூட்டி கிளம்புகின்றனர்..பிணம் எரிய துவங்க..அங்கே அம்பேத்கார் பிணத்தை எரித்துக் கொண்டிருக்க,உடன் ஒரு ஆளை விட்டு விட்டு கலியன் தனது மற்ற ஆட்களுடன் புளிய மரத்தடிக்கு வந்து காத்திருக்கின்றனர் . வண்ணாத்தி தான் கொண்டு வந்த வெள்ளை வேட்டிகளை காலம் காலமாய் எல்லாவற்றின் சாட்சியாய் நிற்கும் அந்த புளிய மரத்தினடியில் போட ,இறந்தவர்களின் சொந்தங்களும்,ஊர் பஞ்சாயத்து பேசும் பெருசுகளும் நடுநாயகமாய் அமர,சடங்கை காப்பாற்றும் கவுண்டனும் ,யாருக்கு எவ்வளவு என எண்ணிகொடுக்க ரெட்டியும், மேலும் சில பெருஞ்சாதி ஆட்களும் அமர்ந்திருக்கின்றனர்..அவர்களின் எதிரே குடி வெட்டியான் எனப்படும் கலியனும் அவரின் பின்னே பறையடித்து வந்த மற்றவர்களும் நிற்கின்றனர்..அவர்களுக்கு சற்று தள்ளி வன்னாத்தியம்மா ஓரமாக நிற்கிறார்..நாவிதர் அந்த அம்மாவுடன் சேர்ந்து நிற்க,இவர்களுடன் நிற்காமல் சற்று தள்ளி குடி சக்கிலி எனப்படும் மருதை நிற்கிறார்..நெஞ்சை நிமிர்த்தி பறையடித்து வந்த பறையர்கள் முதற் கொண்டு மற்ற எல்லோருமே அந்த சுடுகாட்டு பஞ்சாயத்தின் முன்பு கூன் விழுந்த நிலையில் தங்களது துண்டை இடுப்பில் கட்டியிருக்கிறார்கள்..எல்லோரும் அமர்ந்து முடித்ததும் பஞ்சாயத்தாரின் எதிரில் இருந்த அனைவரும் இடுப்பில் துண்டை கட்டி நெடுஞ்சான் கிடையாக விழுந்து கும்பிட வேண்டும் இது மரபு(?) அப்பொழுது எதேச்சையாக பஞ்சாயத்திற்கு எதிரிலிருக்கும் மக்களுடன் நின்றிருந்த என்னை நோக்கி கோபமான குரல் ஒன்று பஞ்சாயத்து பக்கமிருந்து வர , அதனை ஒட்டி பல குரல்கள்.. .. "டேய் மூர்த்தி..நீ என்னடா பறப்பய பக்கத்துல போய் நிக்கிற..பேசாம அவன் வீட்ல பொண்ணு கட்டிக்கிட்டு பறையடிடா.." "அந்த மூதி மெட்ராஸ் போனதுல இருந்து பெரியார் கிழவன் சொன்னான்னு ஏதோ புஸ்தகம் படிச்சிட்டு வந்து அவனும் இவனும் சமம்னு உளறுது.." "டேய்..அதா சொல்றம்லடா..இந்தாண்ட வா.." கோபம் தலைக்கேறியது.அவ்வளவு பேரின் எதிரில் திட்டிய திட்டுகள் பதட்டத்தை ஏற்படுத்தின. ” யேன்..நின்னா என்ன நடக்கும்...” எல்லோரும் கொள்ளென சிரித்தார்கள்... ”டேய்...அப்படித்தான்..அந்த சைக்கிள் கடை தாடிக்கார முனுசாமி கிழவன் வீராப்பா இருந்தான்..போன வாரம் இங்கதான் பொதைச்சோம்..” கடைசிவரை கருப்பு சட்டையுடன் கோயில் எதிரே பெரியார் மிதி வண்டி கடை வைத்து,சமூக மறுப்போடு வாழ்ந்து மறைந்த முத்துசாமிதான் எனக்கும் பெரியாரை சொல்லி கொடுத்தவர்.அவரையும் கிண்டலடிக்கும் இவர்களிடம் என்ன பேசுவதென தெரியாத ஒரு பதட்டம். அந்த கணத்தில் கொஞ்ச நஞ்ச வீரமும் போய்விட்டது ..போவதா வேண்டாமா என்கிற தடுமாற்றத்தில் நின்று கொண்டிருந்தேன்..எனது சொந்தங்கள் கத்தலில் தேக்கி வைத்திருந்த அறிவு மழுங்க,இதுநாள் வரை பேசிய முற்போக்கு முடங்க, எதிர் திசை வந்து விட்டேன்.. மொத்தமாக கடையில் ஒரு ரூபாய்,இரண்டு ரூபாய் ,ஐந்து ரூபாய் என மாற்றி எடுத்து வரப்பட்ட காசுகள் பாலித்தீன் பையை மீறி பிதுங்கி வழிகின்றன..அதிலிருந்து ரெட்டி சில ஐந்து ரூபாய் காசுகளையும் கொஞ்சம் பணத்தையும் எடுக்கிறார்..பணத்தை வாங்கி சரி பார்க்கும் கவுண்டன் அதை தானும் எண்ணியபடியே.. "கலியா உன் ஆளு..எத்தனடா.." "ஆறுங்க." "என்னடா..என்கிட்டே..பொய்யா.." "கவுண்டரே..இங்க நாளுங்க..பொணம் எரிக்கிற இடத்துல ரெண்டுங்க.." "டேய்..அந்த ஓட்டல் வேலை செஞ்சவன்லாம் ஒரு கணக்காடா..இந்தா..?" பணத்தை குனிந்து வாங்கிய கலியன் எண்ணிபார்த்து விட்டு பதறி..அவர்கள் முன்பு நெடுஞ்சான் கிடையாக மண்ணில் விழுந்து கும்பிட்டார். "கவுண்டரே..கட்டாதுங்க நான் குடிங்க ..இவங்க எல்லாம் வெளி ஆளு..எல்லாருக்கும் கொடுக்கணும் " பேசியபடி எழுந்த கலியன் மற்றவர்களிடம் கண் காட்ட, அவருடன் மற்ற பறையடித்தவர்களும் நெடுஞ்சான் கிடையாக விழுந்து சபையை கும்பிட்டனர். கவுண்டர் முகத்தை கோபமாக வைப்பது போல வைத்துக் கொண்டு கொஞ்சம் மேலும் சில்லறைகள் கொஞ்சம் தூக்கி எதிரில் போட்டார் . "அவ்ளதான்..இந்தா ..?" அந்த சில்லறைகளை எடுத்த கலியன் எண்ணிபார்த்து விட்டு மீண்டும் "கட்டாதுங்க .."என நெடுஞ்சாண்கிடையாக மீண்டும் விழ,மீண்டும் அதே போல கொஞ்சம் சில்லறைகளை தூக்கி கோபமாக எறிந்தார் ரெட்டி. " கலியா சும்மா சும்மா கால்ல விழுந்து காரியம் சாதிக்காதடா..முதலியார்கிட்ட கொட்டியா கிடக்குது.." " எங்களுக்கு கட்டிபடியாகனுங்களே சாமி..ஆறு சீவன் வந்துருக்குதுங்க..ஒடம்பு வலிக்கு சாராயம் குடிக்க கூட காணலைங்க..இல்லன்னா நான் தான் என் கைகாச போட்டு கொடுக்கணும் பாத்து குடுங்க கவுண்டரே.." "உன் முதளிதானேடா..அந்த ஆயிக்கு உன் கடன் செஞ்சதா இருக்கட்டும் போடா.." இப்படியாக விழுந்து கும்பிட கும்பிட ,கொஞ்சம் எக்காலமும், விளையாட்டுமாக அந்த சபை தூக்கி எறிந்த சில்லறைகள், செருப்பில்லாமல் வெந்தனலில் கால் ஆடி,தசையாடி,கைகள் அதிர,உழைத்தவர்களின் அன்றைய தேவைக்கு கூட போதுமானதாக இல்லை.எல்லோர் முகங்களிலும் கவலை அப்பியிருக்க ,இதற்கு மேலும் எப்படி கேட்பது என புரியாமல் தவித்து நிற்கின்றனர். "கலியா ..இதுக்கு மேலயும் கால்ல விழுந்த நான் எந்திரிச்சி போய்டுவேன்.." கவுண்டன் இறுதியாக சொன்னதும் சபையில் இருந்த அனைவரும் ’கொல்’லென்று சிரிக்கின்றனர். என்ன செய்வதென தெரியாமல் தயங்கி தயங்கி கலியன் கீழே விழுந்த கொஞ்சம் சில்லரையும் பொருக்கி கொள்கிறார.அடுத்து வன்னாத்தியம்மாவுக்கும் அதே நிலைமைதான்..குடி சக்கிலிக்கும் அதே நிலைமைதான்..இதில் ஒரே ஒரு வித்தியாசம்..குடி சக்கிலியருக்கு மட்டும் கீழே போடும் காசுகளை எடுக்க உரிமையில்லை..அந்த உரிமை குடி பறையருக்கு தான் உண்டு..அவர் எடுத்து குடி சக்கிலியருக்கு போடுவார்.இதில் ஒரே ஒருவர் மட்டும் பணம் முன்னேமே பேசி வருவார்..அவர் யார் காலிலும் விழுவதில்லை..சின்னதாக முதுகை வளைத்துக் கொடுத்து வாங்கி கொள்வதோடு சரி..அந்த சிறப்பு உரிமையை பெற்றவர்..நாவிதர்.. எல்லாம் முடிந்து சபையினர் களைந்து விட்டனர்.வன்னாத்தியம்மா..கடைசியாக அவள் விரித்திருந்த வேட்டியில் விழுந்திருந்த சில சில்லறைகளை பொறுக்கிக் கொண்டு வேட்டியை எடுத்துக் கொண்டு கிளம்பி போக,மற்றவர்களும் கிளம்ப, கலியனுடன் வந்தவர்களுக்கு தன்னிடமிருந்த அனைத்து காசுகளையும் கொடுத்து அனுப்பி விட்டு, பிணம் எறியும் திசையையே பார்த்தபடி காதில் இருந்த ஒரு பீடியை பற்ற வைக்கிறார். அம்பேத்காரும் அவனுடனிருந்த ஒரு ஆளும் எறியும் சிதையில் பிணத்தை மூட்டு குச்சியால் தூக்கி நிறுத்தி அடிக்க துவங்குகிறார்கள்.பிணத்தின் ஊனிலிருந்து சில கொழுப்புகள் தெறித்து பற்றியெறியும் தீ நாக்கில் விழுந்து அப்படியே கருகியது.தூரத்திலிருந்து கலியனின் பாடல் காற்றையும் கிழித்து வீசியபடி பிணத்தை நோக்கி வருகிறது. குறிப்பு : காக்கை சிறகினிலே இதழில் வந்த கதை

எங்களுக்கென‬ நதி இருந்தது ...

எங்களுக்கென‬ நதி இருந்தது .... யாராலும் பெயர் சூட்டப்படாத பறவைகள் எங்களின் வனம் முழுதும் குதூகளித்து கிடந்தன,. பூமியின் பாரிய பரப்புகளை அதிர்வித்து மகிழ காட்டாறுகள் எங்கள் வசமிருந்தன.. அவ்வப்போது எம் குழந்தைகளை மகிழ்விக்க எங்களின் மூத்தி நீலி இருந்தாள்.. நாங்கள் மற்ற உயிரினங்களை போல உணவு சேகரிக்க வயல் வெளிகளை படைத்திருந்தோம் .. எங்களின் காதலை முன் மொழிய ஆவாரம் பூக்களை எம் பெண்களுக்கு சூட்டி மகிழ்ந்த நினைவுகள் இப்பொழுதும் மிச்சமிருக்கின்றன.. இப்பொழுது நினைவுகள் மட்டுமே மிச்சமிருக்கின்றன... வேட்டையாடிய .. உழைத்து சேகரித்த உணவை ஒன்றாய் சமமாய் முதலில் குழந்தைகளுக்கும், உடல்பிறழ்தவருக்கும், முதியவர்களுக்கும் கொடுத்து பின் நாங்கள் பசியாறிய பொழுதுகளை ஆரிய படையெடுப்பில் பலிகொடுத்தோம்... சாதியாக எங்களை நாங்களே பிரித்து கொள்ள பணிக்க பட்டோம் .. முதலில் இங்கிருந்தே நாங்கள் வேறானோம் .. பின் நிலம் .. பின் வனம்.... பின் எங்களை... மனிதர்களாய் பழக்கப்படுத்திய எங்களின் மொழி .. எங்களின் பாடல் .. எல்லாம் வருபவனிடம் கொடுத்து கொடுத்து கட்டுண்டோம் .. எல்லாம் முடிந்ததது ... எமக்காக கரும் புலியாக காட்சியளித்த தலைவனும் இல்லை .. ஒன்றே ஒன்றை மட்டும் மிச்சம் வைத்திருக்கிறோம்.. அது அடிமை ..