சனி, 25 ஜூன், 2016

லாரி டிரைவர் ராஜாக்கண்ணு


லாரி டிரைவர் ராஜாக்கண்ணு -சிறுகதை-வ.கீரா திருச்சி சந்தை மசங்கி கிடந்தது.சூரியன் பூக்காத அந்த பொழுதில் நிலா தன்னை மறைக்க செஞ்சிவப்பு வானை இழுத்துப் போர்த்த முயன்று கொண்டிருந்ததை ஈபி காலனி அரசமரத்தில் துயிழெலுந்த காக்கைகளின் கெக்கெலிப்பில் ஊர் அறிந்து கொண்டிருந்தது.


வியர்வை சட்டையை மாட்டியபடி உழைப்பாளிகள் வண்டிகளில் இருந்து பாரங்களை இறக்கிக் கொண்டிருந்தார்கள்.மாரியாயி கிழவி அந்த அதிகாலையிலும் பனியை மீறியபடி வெப்பலாக வியபாரம் பேசிக்கொண்டிருந்தார். லாரிகள் உறுமியபடி இருந்தன.அவற்றின் உறுமல் அந்த பகுதிக்கு மிக பழைய உறுமலாக இருந்திருக்க வேண்டும்.எந்த அசட்டையுமற்று மக்கள் சத்தங்களின் ஆலாபனையை கடந்து சென்றபடி இருந்தனர்.சந்துரு வந்து வெகு நேரம் ஆகி இருக்க வேண்டும்.கண்ணை மீண்டும் கசக்கி பார்த்தான் மூர்த்தி.இருட்டில் லாரியின் பின் டயருக்கு அருகில் தெருவோர திண்டில் அமர்ந்திருந்தார்.வழக்கமாக என் எல் எஸ் லோடு புக்கிங் அலுவலகத்தில் ஓட்டுனர்களின் உறக்கம்.சந்துருவும் அங்குதான் தூங்குவார்.மூர்த்திதான் எழுப்புவான்.இன்றென்ன அவரே எழுந்துவிட்டார் என்கிற குழப்பம் அவனை வளைத்தது.கிளினர் பலகையிலிருந்து எம்பிக் குதித்து லுங்கியை இடக்கு மடக்காக வாரிக்கட்டியபடி அவரிடம் போனான். அந்த இருட்டை பிளந்திருந்தது சந்துருவின் முகத்தில் அப்பியிருந்த கருமை. இருவரும் டீ சாப்பிட போனார்கள்.பாலிலிருந்து நீர் புகையாக பரவி அச்சிறு கடையை நிரப்பியிருக்க,இருவருக்கும் தேனீர் வந்தது.அத்தனை சூட்டையும் ஒரே தடவையாக உறிஞ்சி முடித்திருந்தான் சந்துரு.மூர்த்தியால் இதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.சந்துருவின் கருமை தேனீராகி மூர்த்தியின் நாக்கை ஊடுருவி தொண்டையின் சிக்கிமுக்கி கல்லை கருப்பாக மாற்றி சிறுகுடல் பெருங்குடலென பரவி அடுக்கி வைக்கப்பட்ட கருநாகம் போல குடல் வெளிச்சமற்று கருகியது. சந்துரு இன்றைய லோடுக்கு வரப்போவதில்லை என்பதை மூர்த்தியால் உணர முடிந்தது.நேற்று மாலை மருத்துவமனைக்கு ரிசல்ட் வாங்க போகும்பொழுது தன்னை கழட்டி விட்டு போனதை வைத்தே ஓரளவு உணர்ந்திருந்தான்.சந்துருவின் நெடிய ஆறடி இரண்டங்குல உயரமும் நூறாண்டு பலாக் கிளையை வெட்டி பிளந்த பரந்த செம்மார்பும் கூட கூனி நின்றதில் அவன் உணர்ந்து கொண்டான். பொதுவாக நடையில் வழியில் இறங்காதவன்தான் சந்துரு.ஹான்ஸ் புகையிலையை உள்ளங்கையில் பெருவிரலால் அதக்கி உதட்டை இழுத்து பல்லுக்கு இடையில் வைத்தபடி லாரியை எடுத்தால் சாறின் கிறக்கத்தில் அடிச்சுப்போட்டாப்ல தொழுதூர் பிரிவுலதான் நிறுத்துவான்.காதலிச்ச பொண்ண விட்டுட்டு வேற பொண்ண கட்டிக்கிட்டதிலிருந்து வாய்ப்புக் கிடைக்கும் பொழுது சமயபுரத்துலயோ,பாடாலூர் காட்டுக்கிட்டயோ கைப்போடுற இராபெண்கள்கிட்ட மாட்டிக்கிட்டான்.வண்டிச் சூட இறக்கிவைக்க போன ஆளு,நோய பத்திக்கிட்டு வந்துட்டான். ”..யாரு ஆளு மாத்துறது..” ”ராஜாக் கண்ணு வரான்” சந்துருவை அதன் பிறகு ஈபி காலனி பக்கம் பார்க்கவே இல்லை மூர்த்தி. ராஜாக்கண்ணு என்றதும் லாரி டிரைவர் ராஜாக்கண்ணு சிவாஜி கணக்கா கொழுக் மொழுக்கென மூர்த்தி எதிர்பார்த்து ஏமாந்து போனான். தோலுரித்து குடல் இறக்கிய ஆடு பாய்கடையில் தலைகீழாக தொங்கியது போல ஏப்பசாப்பையாக வந்து வாய்த்தான் டிரைவர் ராஜக்கண்ணு.எழும்பை கழிச்சா அரை கிலோ சதைதான் தேறும்.குருவிக்குடுவையை தலையில கவிழ்த்து மூக்குக்கு கீழ இரண்டு பக்கமும் கம்பளிப் புழுவை பொறுத்தியிருந்தான் ராஜாக்கண்ணு.அவ்வப்பொழுது புழுவை நீவிவிட்டு சிலிர்க்க வைப்பான்.மூர்த்தியும் அவனோடு செட்டானான்.வேறு வழி. வண்டியை பறக்க விடுதலில் பிணந்தின்னி கழுகு ராஜாக்கண்ணு.கல்லணையில மேரியோட ஆளுங்கள அள்ளிப் போட்டுக்கிட்டு சிட்டாப் பறந்து புதுக்கோட்டைய தொட்டு நின்னான் ராஜாக்கண்ணு. மேரி அழுத்தமானவ.எவன் கண்ணு மார்ல சிக்குனாலும் கண்ண பிச்சு காக்காய்க்கு போட்டுறுவா.ஒத்தை ஆளா சேத்து குழி கால்வாயில இருந்து என்பது கிலோ வாழைகுலையை குழந்தைய தூக்கியாற மாதிரி காய்க்கு காயம்படாம வண்டியில சேர்ப்பா.மேரி மாதிரிதான் மேரிகிட்ட இருக்குற ஆளுங்களும்,வாழைக்காய் லோடுக்கு போற எந்த டிரைவரும் பயப்படச் செய்வான்.எப்ப எந்த ஈரத்துல பதிஞ்சு வண்டி நிக்கும்னு தெரியாது.அதுவும் லோடு ஏத்தி வண்டி அழுந்தினா அவ்ளோதான்.கட்டைய சொறுகி,கல்ல சொறுகி,வாட்டம் புடிச்சி வண்டிய மேடு ஏத்துறதுக்குள்ள கால்பகல் அரைப்பகல தின்னுடும். ஆனா மேரி ஆளுங்க வாழைக்காய் ஏத்த வந்தா டிரைவருக்கும் கொண்டாட்டம்,கிளினருக்கும் கொண்டாட்டம்.நல்ல இடத்துல வண்டிய விட்டுடலாம்.எவ்ளோ தூரம்னாலும் அசால்ட் பண்ணிடுவாங்க.அதே மாதிரி.அட்டி அடுக்குறதும் அவங்கதான்.ஒரு வாழைக்காய் கூட இறக்குற வைரைக்கும் நசுங்காது.தேய்ஞ்சி கருப்படிக்காது.மத்த ஆளுங்க வந்தா கிளினர் நாக்குத் தள்ளிப் போவனும்.அட்டி அடுக்குறதுக்கும்,கிளினர் வேணும் ,தார்ப்பாய் போடுறதுக்கும் கிளினர்தான் செய்யணும்னு அடம் பிடிப்பாங்க.சில நேரம் ஆளு பத்தலன்னு தோப்புக்குள்ள போய்தார் தூக்கி தோளுல வச்சி விடனும்.நாளு தார் தூக்கும் பொழுது மலைப்பு தெரியாது.நாற்பது தார் தூக்கி விடும்பொழுதுதான் இடுப்பெழும்பு சதிராட்டம் போடுறது தெரியும்.அன்னைக்கு முழுக்க கிண்ணுகிண்ணுன்னு வலி நிமித்தி நிமித்தி ஆள படுக்க வைக்கும்.மேரி ஆளுங்க கெட்டி. மூர்த்தி கல்லணை ஆளுங்கண்ணா ரொம்ப துள்ளுவான். அடிச்சி பிடிச்ச மாதிரி,ஆம்பள ,பொம்பள அத்தனையும் கல்லணை மாதிரி முறுக்கா இருப்பாங்க.ராஜாக்கண்ணு பார்வை மேரி மாரை குறிச்சிக்கிட்டே இருந்தது.வேலை நேரத்துல பாய்ச்சல் எதுக்குன்னு மேரியும் அடக்கி வாசிச்சா. ”..இந்த தோட்டத்து பழம் எம்மாம் பெரிசு..” ராஜாக்கண்ணு பேச்சும் நிக்கல.பேச்சு பெருத்தா மூஞ்சி சிறுக்கும்,மூஞ்சி சிறுத்தா மேரி என்ன பண்ணுவான்னு எல்லாருக்கும் தெரியும்.அதுக்கும் நேரம் பொத்துக்கிட்டு ஊத்துச்சு.வண்டி வலது பக்கத்துல நின்னு பீடிஉள்ள இழுத்து புகைய வெளிய இழுத்துக்கிட்டிருந்தான்.மூர்த்திக்கு அப்பொழுதே சந்தேகம்.ஏன் மேரி அட்டி அடுக்க மேல ஏறினான்னு.அது நடந்து போச்சு.அட்டி அடுக்குற சாக்குல வண்டி உயரம் தாண்டி மேல நின்ன அட்டியில இருந்து ஒரு குலையை அப்படியே நங்குன்னு போட்டாப்பாரு. ராஜாக் கண்ணு சேத்துல முழுங்கி எந்திரிச்சான்.ஆவேசம்னா ஆவேசம்.ஆனா எதுவும் பேசல. வண்டி உள்ளவும் ஆளுங்கள ஏத்தல.வாழைக்காய்க்கு மேலதான் மேரி ஆளுங்க வந்தாங்க.தண்டனைய வழியில காட்டினான்.உழைச்ச களைப்புக்கு எப்பவும் புதுக்கோட்டை தாண்டி கீரனூர் முருக விலாஸ் புராட்டா அடிச்சாதான் நிம்மதியா இருக்கும் மேரிக்கு.எங்கியும் நிறுத்தல.அவசரமா லோடு போவணும்னு சொல்லி,கல்லணைக்கு முன்னாடி இருக்குற பிரிவுலயே எறக்கி விட்டுட்டு வந்துட்டான் ராஜாக்கண்ணு. ”...பறச்சிக்கு எம்புட்டு திமிரு..அடுத்தவாட்டி கழுதய வாழைத்தோப்புல உட்டு நவுத்துறனா இல்லையான்னு பாத்துக்க...” ராஜாக்கண்ணுவின் சப்பை முகத்தில் கோபம் வீங்கி கிடந்தது.மூர்த்திக்கு அவனது செயல் அருவருப்பாக இருந்தது. புக்கிங் அலுவலகத்தில் நடைமுறை முடித்து வண்டி பறந்தது இரவை புள்ளிக் கோலங்களால் நிரப்பிக் கொண்டு.விருத்தாச்சலம்,நெய்வேலி,குறிஞ்சிப்பாடி வரைக்கும் அங்கங்க கடைகளின் கொள்முதலுக்கு ஏற்றபடி வாழைகுலை இறக்கி முடிந்தது.சாமத்தை தின்று செரித்ததடி யமனாக பயணபாகத்தை சுற்றியபடியே இருந்தது அனல்மின்நிலைய புகை.வண்டி லோடு இறக்கி முடித்ததும் வண்டியின் பாடியை கூட்டி சுத்தம் செய்து தார்ப்பாய் மடித்து கேபினில் இறுக்க கட்டி காத்திருந்தான் மூர்த்தி.தொழுதூர் பிரிவு வரை பம்மி பதுங்கி வந்த வண்டியின் உற்சாகம் தொழுதூர் பிரிவில் கைப் போட்ட அம்மாவும் பெண்ணையும் கண்டு விழித்தது. வண்டியை நிறுத்தியதும் மூர்த்தி இறங்கி வழக்கம் போல வண்டி டயர்களை தட்டிப் பார்த்து விட்டு காற்றை சோதித்து விட்டு வண்டியில் ஏறினான்.ஓட்டுனர் இருக்கையின் பின்னால் ஒளிரும் இருளில் பாய்ந்தோடும் நதியின் சிணுங்களோடு மந்தகாச புன்னகையுடன் அவள். மூர்த்தி தேய்த்த இருக்கைக்கு பின்னால் அழுக்கு மெத்தையில் வெத்தலைமணத்தோடு அவள்.இருவரும் தாயும் மகளும்.அப்படி இருக்கவும் கூடும்.அல்லது இல்லாதிருக்கவும் கூடும்.வண்டியின் கேபினில் வண்டியை இயக்கும் அனைத்து நரம்புகளும் புடைத்துக் கிடந்தன.அடர் இருள்.எதிரே வாகனங்கள் அவ்வப்பொழுது நிலாபந்துகளை கொண்டு வந்து வீசி எறிந்து விட்டு சடார் சடாரென மறைந்து கொண்டிருந்தன.அவ்வலவு கடுமையாக வீசியும் அப்பந்துகள் ஒளியை மட்டுமே வீசி விட்டு சாலையெங்கும் மரணித்துக் கொண்டே இருந்தன தனது சடலம் யாருக்கும் தட்டுப்பட்டு விடாதபடி. வாகன ஓட்டுனர்களின் வழக்கமான அனுபவபிரதிகள் இவை என்றாலும் மூர்த்திக்கு புதிது.அவன் அதற்கு முன்பு வேலை பார்த்த நாமக்கல் வண்டியின் முதலாளி சொல்லியிருக்கிறார். ”வண்டி லட்சுமிடா...இவனுங்க பொச்சடகி இருக்கானுங்களான்னு பாரு..இல்லன்னா என்கிட்ட சொல்லி உட்று. இஞ்சின் பெல்ட் எடுத்து வாரி உட்றுவம்” நாமக்கல் வண்டி தமிழ்நாட்டில் இருந்து வடக்கே பஞ்சாப் வரை சென்று வர பதினைஞ்சி நாள் ஆகும்.ஆனால் அவனது பழைய முதலாளியிடம் வேலை செய்த யாரும் லட்சுமிக்கு துரோகம் செய்யவில்லை.ராஜாக்கண்ணு ஒரு நாள் நடைக்கே செய்கிறான். ராஜாக்கண்ணுவிற்கு இன்னமும் மேரியின் மார்பு மனதை அழுத்திக் கொண்டே இருப்பதை வழித்தடமெங்கும் கண்டு வந்த மூர்த்தி இராப் பறவைகளின் ஏற்றத்தை பழகிக் கொண்டான்.ஆனால் அந்த பெண்கள் அப்படியிருக்க முடியாதென்றே அவன் நினைத்தான். ஏறியவர்கள் இறங்கும் இடத்தை சொல்ல வில்லை.இவர்களும் கேட்க வில்லை.யாரும் பேசிக்கொள்ளவும் இல்லை.மனம் கிழித்து எவ்வளவு நேரம் தான் ஓரக்கண்ணால் பார்ப்பது.உழைப்பின் அழுப்பில் கிளினர் பலகையில் குறுக்கி உறங்க ஆரம்பித்தான் மூர்த்தி. சாலை பாம்பாக மாறி நெளிந்தபடியே இருக்க,மூர்த்தியும் ராஜாக்கண்ணுவும் மகுடிகளோடு திரிந்தார்கள்.பாம்பு பெரிதாகி அவர்களதுலாரியை விழுங்க் கொண்டிருக்க,மகுடியின் கடைசி நூனியும் பாம்பின் நாவில் சுழன்றடிக்கமூர்த்தியை பாம்பு விழுங்கத் தொடங்கியது.அவனது உடல் அவனது அனுமதி இன்றியே பாம்பின் உடலுக்குள் நெளிந்து நெளிந்து சென்றது. மூர்த்திக்கு கண் இருட்டியது.விடாப்பிடியாக கண்ணை கசக்கி எழுந்தான்.சாலையில் லாரி தனது வழக்கமான வேகமற்று ஊர்ந்து கொண்டிருந்தது.கேபின் இருட்டாக இருந்தது.தனக்கு பின்னால் அந்த அம்மாள் உறங்கிக் கொண்டிருந்தாள்.அவளது வாயிலிருந்து வெற்றிலை கொடி சிகப்பாக வழிந்து தொண்டையை கடந்து கொண்டிருந்தது.மூர்த்தியின் பார்வை ஓட்டுனரின் இறுக்கைக்கு பின்னால் இருந்த பாவையை தேடியது.இருட்டில் அவள் ஓட்டுனர் இருக்கையை ஒட்டி அமர்ந்திருந்தாள்.அவலது கைகள் ஓட்டுனரின் இடுப்பை நோக்கி நீண்டிருந்தது. வண்டியின் வேகம் அதிகரிப்பதும்,குறைவதுமாக ராஜாக்கண்ணுவின் முகத்தில் இழையோடிய காமநரம்புகளின் கதறலால் அறிய முடிந்தது.மூர்த்தியின் புலன்கள் விழித்துக் கொண்டன.வண்டியின் பானட்டை மீறி கொதிக்கும் வெப்பம் கேபினில் தகித்துக் கொண்டிருந்தது.வெப்பத்தையும் எரியூட்டி கொதிக்க வைத்துக் கொண்டிருந்தார்கள் ராஜாக்கண்ணுவும் இராப்பெண்ணும். பாடாலூர்க் காட்டின் நடு மையத்தில் கிழித்த சாலையின் ஒரு புறம் வண்டி நின்றது.வழிந்த கோட்டை சேலையில் துடைத்தபடி எழுந்தாள் மூர்த்தியின் பின்னிருந்த அம்மா.ஓட்டுனரின் பின்னிருக்கையில் இருந்த இராப்பெண் தனது ஜாக்கெட்டை முடி இருக்க வில்லை.கச்சை மார்புகளுக்கு மேலே இருந்த படி மாரை வெளியே பிதுக்கி இருந்தது.அவள் மூர்த்தியை கண்டு கொள்ளவே இல்லை.வண்டி நின்றதும் நடக்கும் டயர் தட்டி பார்க்கும் சம்பிரதாய அரங்கேற்றத்தை நிகழ்த்த மூர்த்தி சென்றான்.அவனது காதுகளை அங்கேயே விட்டு விட்டு. யாரும் காட்டின் உள்ளே நுழைய வில்லை..பேச்சு மெலிதாக தொடங்கி சூடாகிக் கொண்டிருந்தது.இது பேச்சுக்கான நேரமில்லையே.. ”..நூறு ரூவாய்க்கு சல்லிப் பைசா குறைக்க மாட்டேன்..” கிளினர் இருக்கைக்கு பின்னிருந்த வெற்றிலையம்மா பேசினார். ராஜாக்கண்ணு ஒரே பதிலாகத் தந்தான் ”..20 ரூவாய்க்கு மேல ஒரு பைசா தர முடியாது...” ”..எம் புள்ள மூஞ்ச பாரு..” ”..இருட்டுல மூஞ்ச பாத்து என்ன செய்றது..” “..சரி..உனக்கும் வேணாம்..எனக்கும் வேணாம்..80 ரூவாக்குடு...” ”..முடியாது..இருவதுக்கே ஜாஸ்தி...” “..யோவ்..தொழுதூர்ல இருந்து அஞ்சு வண்டியாவது மாறி இருப்பேன்யா...இன்னேரத்துக்கு மூன்னூறு ரூவா பாத்துருப்பேன்..உனக்கு ரெண்டு வாட்டி செஞ்சு விட்டேன்..” இராப்பெண் தான் முதல் முறையாக வாய்த் திறந்தாள். ”..அதுக்கெல்லாம் காசு தர முடியாது..இப்ப மேட்டருக்கு மட்டும் தான்...” மூர்த்திக்கு அருகில் செல்வதா அங்கேயே நிற்பதா என்கிற குழப்பம்.ராஜாக்கண்ணு பிடிவாதமாக இருந்தான்.இராப்பெண் தயங்கியபடியே இருந்தாள். ”..ஒரு ஐம்பது ரூவாயாவது குடு..” ”..முடியாது...இருவதுதான்..நல்லாருந்தா ரெண்டுரூவா சேத்து தரேன்...” அவளை வேகமாக காட்டிற்குள் இழுத்தான்.அவள் உறுதியாக நின்றாள்.ராஜாக்கண்ணுவால் இழுக்க முடியவில்லை. ”..ஐம்பது ருவான்னா..” ”..ஏய்..” மூர்க்கமாக இழுத்தான் ராஜாக் கண்ணு.கிளினர் இருக்கைக்கு பின்னிருந்த அம்மா அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். ”..ஐம்பது ரூ..வா...” இராப்பெண் சொல்லி முடிக்க சட்டென கையை ஓங்கிக் கொண்டு ராஜாக்கண்ணு, ”..ஏய்...அறைஞ்சன்னா...வாடி..நான் யார் தெரியுமில்ல...தஞ்சாவூர் கள்ளன்டி..கொன்னுடுவேன்..வந்து படுடி...” அந்தப் பெண் தனது தாயை பார்த்தாள்.தாய் வேகமாக வந்து வெற்றிலையை பளிச் சென கீழே துப்பி விட்டு,சேலையை தூக்கி சொறுகியபடி எட்டி ராஜாக்கண்ணுவின் இடுப்பு விலாவில் ஒரு உதை விட்டாள்.கனமான உதை.மழுக்கென்றது. ”..எச்சப் பொறுக்கிக்கு சாதி ஒரு கேடு..” மூர்த்தி ஓடி வந்து பார்த்தான் .ராஜாக்கண்ணு பள்ளத்திலிருந்து எழுந்துவர முயன்று கொண்டிருந்தான். இராப்பெண்,தனது அம்மாவுடன் எதிர் சாலையில் நடந்து கொண்டிருந்தாள்.சாலையெங்கும் நிலா பந்துகள் ஓடி ஓடி வந்து விழுந்து ஒளிபாய்ச்சி சுவடற்று இறந்து கொண்டிருந்தன.இரண்டு நிலாக்கள் வேகமாக ஓடிவந்து மூச்சிரைக்க நின்றன. அவர்கள் ஏறினார்கள். நன்றி : யாவரும்.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நீயும் நானும் நாமாகும் பொழுது..